50+ வயதிலும் அதே அழகு!

நடிகை இளவரசி
நடிகை இளவரசி

நிலவு தூங்கும் நேரம்... கீதம் சங்கீதம் ... ஜானகி தேவி ராமனை தேடி... எண்பதுகளின் இந்த ஹிட் பாடல்களை யாரும் மறந்திருக்க முடியாது இந்தப் பாடல்களின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர்தான் நடிகை இளவரசி. 80 களில் இவரின் துள்ளல் நடிப்புக்கு பலரும்  ரசிகர் ஆனார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களையும் கவர்ந்த ஒரு நடிகை என்றால் அதில் இளவரசி நிச்சயம் வருவார்.

வட்ட வடிவமான அழகிய முகம், திருத்தமான மூக்கு, ஸ்ரீவித்யாவின் கண்கள் போன்ற அழகிய கண்கள் என அழகில் இவர் சிறந்து இருந்தாலும் பார்ப்பதற்கு பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்ததாலும் இளமை துள்ளல் நிறைந்த இவரின் நடிப்பு பெண்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை தந்தது.

1967 இல் சென்னை ஜம்பு சர்மா புவனேஸ்வரி தம்பதியருக்கு மகளாக பிறந்தவர்தான் மஞ்சு சர்மா என்கிற இளவரசி. இவர் தந்தையும் திரைத்துறையில் இருந்தவர் என்பதால் தன் மகளை நடிகையாக்க வேண்டும் என்று விரும்பி அதை நோக்கிய பயணத்தில் மகளுக்கு ஆதரவாக இருந்தார். இவர் முறைப்படி நாட்டியம் கற்றவர். சிறு வயதிலிருந்து கலை ஆர்வத்துடன் எதையுமே எளிதாக கற்றுத் தந்தவர். இவரது வசீகரமான தோற்றத்தால் தமிழ் திரையுலகம் இவரை வரவேற்றது.

கமலின் வாழ்வே மாயம் படத்தில் தனது 14 வது வயதில் குழந்தை நட்சத்திரமாக லிட்டில் மஞ்சு எனும் பெயரில் அறிமுகமானார் இளவரசி. அதில் சாஸ்திரியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளாக நடித்ததால் இவருக்கு வசனம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முகபாவங்கள் மட்டுமே. அதன்பின் கங்கை அமரன் இயக்கத்தில் 1983இல் வெளியான "கொக்கரக்கோ" எனும் படத்தில் இளவரசி என பெயர் சூட்டப்பட்டு கதாநாயகியாக அறிமுகமானார்.  இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறாவிட்டாலும்  அந்த படத்தில் இளையராஜாவின் இசையில் வந்த கீதம் சங்கீதம் என்னும் பாடலில்  இயல்பாக நடித்ததன் மூலம் இளவரசிக்கு திரை உலகம் வரவேற்பைத்தந்தது.

நடிகை இளவரசி
நடிகை இளவரசி

அன்றைய டீனேஜ் பெண்களிடையே இளவரசியின் தாக்கம் அதிகமிருக்கும். நடுவில் வைத்திருக்கும் பெரிய குங்குமப்பொட்டு வெகு பிரபலமாக இருந்தது. அவரைப் பார்த்தாரல் அச்சு அசலாக ஸ்ரீவித்யாவின் லிட்டில் ஜெராக்ஸ் போலவே இருப்பார். அலட்டிக் கொள்ளாத தனது நடிப்பாலும் அதீத அலங்காரங்கள் இல்லாத, செயற்கைத்தனம் இல்லாத இயல்பான ஒப்பனையினாலும் இளவரசி தனக்கென்று ஒரு பாதையை வைத்துக் கொண்டார்.

அதன் பின் இவர் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார் சிறு பாத்திரம் என்றாலும் அதற்கு தன் நடிப்பின் மூலம் தனித்துவத்தை ஏற்படுத்தினார். மனைவி சொல்லை மந்திரம் என்ற படத்தில் நடிகர் பாண்டியனின் குப்பத்து மனைவியாக நடித்து மெட்ராஸ் பாஷையில் அசத்தியிருப்பார். சிவாஜியுடன் "தாய்க்கு ஒரு தாலாட்டு" கமலுடன் "சட்டம்" ராஜேஷ் உடன் "அலைபாயும் நெஞ்சங்கள்" "ஆலய தீபம்" "சிறை" விஜயகாந்த் உடன் "வீட்டுக்கு ஒரு கண்ணகி" "ஊமை விழிகள்" மோகனுடன் "24 மணி நேரம்" "குங்குமச்சிமிழ்" சிவக்குமாருடன் "நான் பாடும் பாடல்" "ஜீவநதி" பாக்கியராஜுடன் "தாவணிக் கனவுகள்" விசுவுடன் "அவள் சுமங்கலி தான்" "சிதம்பர ரகசியம்" "சம்சாரம் அது மின்சாரம்" போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கவனம் பெற்றார். இவர் கதாநாயகியாக மட்டுமே நடிக்காமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இளவரசி அன்றைய ஹிட் பட இயக்குனர்களான ராமநாராயணன் மற்றும் விசுவின் ஆஸ்தான நாயகி ஆனார். கடமை, மனைவி சொல்லே மந்திரம்னு ராமநாராயணன் படங்களில் பட்டையைக் கிளப்பினார்.

விசுவின் சிதம்பர ரகசியம் படத்தில் கதா நாயகியாகவும், அவள் சுமங்கலி தான் படத்தில் சென்டிமெண்ட் விதவையாக நடித்திருந்தாலும் அடுத்த கட்ட பரிமாணத்தைத் தந்தது திமிர் பிடித்த பெண் கேரக்டர்தான். ஆம்.   சூப்பர் ஹிட் படமான "சம்சாரம் அது மின்சாரம்" படத்தின்  திமிர் பிடித்த சரோஜினியை  மறக்க முடியுமா? அதே கேரக்டர் மலையாளத்தில் கொச்சின் ஹனீஃபா வாத்சல்யம் என்று படமெடுத்தபோது அதில் இதே திமிர் பிடித்த மருமகளாக வந்து குடும்பத்தை பிரிப்பார்.

நடிகை இளவரசி
நடிகை இளவரசி

குங்குமச்சிமிழ் இவருக்கு அடையாளம் தந்த படம் எனலாம். மோகனை காதலித்து வீடு இன்றி கடலோரம் வசிப்பார். இந்த படத்தில் "நிலவு தூங்கும் நேரம்" என்னும் பாடல் இன்றுவரை இரவு நேரங்களில் ரசிகர்களை தாலாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

நல்ல நடிகையாக இருந்தும் ஏதோ ஓரு காரணத்தால் தமிழ் சினிமா இவரை பாண்டியன், சுரேஷ், ஆனந்த்பாபு, எஸ்.வி.சேகர் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவே வைத்திருந்தது எனலாம். இளவரசியை மஞ்சுளா சர்மாவாக்கி கன்னட படவுலகம் உயரங்களில் கொண்டு சென்றது. விஷ்ணுவர்த்தனோடு ஜோடியாக. நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனாலேயே தமிழிலிருந்து ஒதுங்கி தெலுங்கில் கல்பனாவாகவும், கன்னடத்தில் மஞ்சு ஷர்மாவாகவும் நிறைய படங்களில் நடித்தார்.

கணவருடன் நடிகை இளவரசி
கணவருடன் நடிகை இளவரசி

இளவரசி 2007, 2008க்கு பிறகு முழுமையாக திரையுலகில் இருந்து காணாமல் போனார். திரையுலகை விட்டு ஒதுங்கி வாழும் இளவரசிக்கு தற்போது வயது ஐம்பத்து நான்கு.. கோபால் என்கிற வங்கி அதிகாரியை திருமணம் செய்து கொண்டு ஒரே மகளோடு அமைதியான குடும்ப வாழ்க்கையை சென்னை ஈசிஆரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிறது அவரைப்பற்றிய தகவல்கள்.     

திரையில் மட்டுமின்றி இல்லற வாழ்விலும் ஜொலிக்கும் இளவரசி எப்போதும் தமிழ் திரை உலகில் ரசிகர்களின் மனதில் அழகான இளவரசியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com