
தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளுக்கு என்றுமே தனி வரவேற்பு இருக்கும். சிறிது நேரமாவது கவலைகளை மறந்து சிரித்து மகிழவே ரசிகர்களும், பொதுமக்களும் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் படங்களின் எண்ணிக்கை இன்றைய காலகட்டத்தில் மிகவும் குறைவு தான். அதற்கேற்ப பெரிய பட்ஜெட் படங்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. இம்மாதிரியான படங்களில் ஆக்ஷன் காட்சிகள் தான் அதிகளவில் இடம் பெறுகின்றன. காமெடிக்கு பெரிதாக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
நாகேஷ், கவுண்டமணி தொடங்கி, விவேக் வடிவேலு, சந்தானம், யோகி பாபு மற்றும் சூரி வரை பல காமெடி நடிகர்களை தமிழ் சினிமா பார்த்துள்ளது. இன்றைய இளம் இயக்குநர்களின் பார்வையில், ஒரு படம் எடுத்தால் அது நல்ல வசூலைப் பெற வேண்டும் என்றே நினைக்கின்றனர். இதனால் மக்களுக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தும் படங்கள் குறைந்து விட்டன. காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பிறகு, சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்துவிட்ட இன்றைய காலகட்டத்திலும் கவுண்டமணி செந்தில் காமெடிகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இவர்களுக்கு அடுத்து விவேக் மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் சிறந்த காமெடி நடிகர்களுக்கான இடத்தைப் பிடித்தனர். இவர்கள் கூட ஹீரோவாக சில படங்களில் நடித்திருந்தாலும், தொடர்ந்து காமெடியனாகவே நடித்து வந்தனர். ஆனால் சந்தானம் மற்றும் சூரி ஆகியோர் ஹீரோவான பிறகு காமெடியனாக நடிக்கவில்லை.
சந்தானம் கதாநாயகனாக அறிமுகமான பின் அந்த இடத்தை சூரி கச்சிதமாக நிரப்பினார். சூரி கதாநாயகனாக மாறியதும் யோகி பாபு அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். இப்போது இவர் கூட சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனால் நாகேஷ், கவுண்டமணி, செந்தில், விவேக் மற்றும் வடிவேலு அளவிற்கு இன்றைய காமெடி நடிகர்கள் நீண்ட காலத்திற்கு காமெடியனாக நடிக்கவில்லை என்பதே உண்மை.
காமெடி கதையம்சம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், தற்போது நடிகர் சிம்புவுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஹீரோவான பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் காமெடியனாக நடிக்கவிருக்கிறார் சந்தானம். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது. சந்தானத்திற்கு முதலில் வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பைக் கொடுத்தவர் சிம்பு. அதனால் தான் சிம்பு கேட்டதும் அதனை மறுக்காமல் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.
இன்றைய தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகள் குறைந்து விட்டதாக நடிகர் சிம்பு சமீபத்தில் தெரிவித்தார். சந்தானம் என்னுடன் நடிக்கவிருப்பது, இனி தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் அதிகம் வருவதற்கான முதல் படி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சந்தானம் ஹீரோவாக நடித்தாலும் கூட அவ்வப்போது காமெடியனாகவும் நடிக்க வேண்டும் என இயக்குநர் சுந்தர் சி ஒருமுறை தெரிவித்தார். அப்போதெல்லாம் மௌனமாய் இருந்த சந்தானம் தற்போது சிம்புவுடன் சேர்ந்து மீண்டும் காமெடியில் கலக்கவிருக்கிறார்.
சந்தானம் காமெடியனாக மீண்டும் திரைக்கு வர இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், தொடர்ந்து அவர் மற்ற நடிகர்களுடன் காமெடியனாக நடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.