
தமிழ் சினிமாவில், 'தெய்வத் திருமகள்' உள்ளிட்ட சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரது கனவத்தையும் ஈர்த்த சாரா, இப்போது பாலிவுட் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.
தனது ஒன்றரை வயதில் முதல் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கிய சாரா அர்ஜுன், 2011-ம் ஆண்டு ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'தெய்வத்திருமகள்'திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் விக்ரமின் மகளாக 'நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் சாரா அர்ஜுன்.
ஒரு மனவளர்ச்சி குன்றிய தந்தைக்கும், 5 வயது மகளுக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. இந்த படத்தில் சாராவின் சுட்டித்தனம், தந்தையுடனான பாசம், தெளிவான பேச்சு, மெச்சூரிட்டியான நடிப்பு போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் ஏராளம். விக்ரம், அனுஷ்காவிற்காக இந்த படத்தை பார்த்தவர்களை விட சாராவின் நடிப்பிற்காக பார்த்தவர்கள் தான் அதிகம்.
அதனைத்தொடர்ந்து சைவம், சில்லு கருப்பட்டி போன்ற தமிழ் திரைப்படங்களிலும் அதன் பின்னர், சல்மான் கானுடன் ‘ஜெய் ஹோ’, இம்ரான் ஹாஷ்மியுடன் ‘ஏக் தீ டாயன்’, ஐஸ்வர்யா ராய் உடன் ‘ஜஸ்பா’ போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல மொழிப் படங்களில் நடித்துள்ளார். நீண்ட இளைவெளிக்கு பிறகு 2023-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து இருந்தார்.
இந்த நிலையில் பாலிவுட் படத்தில் நடிகை சாரா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். 'துரந்தர்' திரைப்படத்தில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான ரன்வீ சிங் ஜோடியாக 20 வயதேயான சாரா அர்ஜூன் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிக்கும் அதிரடி-ஸ்பை த்ரில்லர் படமான 'துரந்தர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரன்வீர் சிங் பாகிஸ்தானுக்குள் ரகசியமாகச் சென்று சாகசங்களில் ஈடுபடும் இந்திய உளவாளியாக நடிக்கிறார். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். ஆதித்ய தர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாஸ்வத் சச்தேவ் இசையமைத்திருக்கிறார். 'துரந்தர்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
'துரந்தர்' படம் வரும் டிசம்பர் 5ம் தேதியன்று உலகளவில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரன்வீர் சிங்கிற்கு தற்போது 40 வயதாகும் நிலையில் 20 வயதான சாரா அர்ஜூன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளது குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதம் செய்து வருகின்றனர்.