‘ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ்’ நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் திரைப்படம், ‘கிடா.’ இப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, ரவி கிஷோர், கிருஷ்ண சைதன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். திரையரங்கில் வெளியாகும் முன்பு இந்தத் திரைப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இப்பட திரையிடலின்போது அரிய நிகழ்வாக அரங்கில் இருந்த மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி இந்தப் படத்தினைப் பாராட்டினார்கள்.
இத்திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ரவி கிஷோர் கூறுகையில், “கிடா’ திரைக்கதை என் மனதினை உலுக்கியது. உடனே இயக்குநரை ஒப்பந்தம் செய்து இந்தப் பட வேலையைத் துவக்கி விட்டேன். இயக்குநருக்கான முழு சுதந்திரம் கொடுத்து இந்தக் கதைக்கு உயிர் கொடுத்தேன். இப்படியாகத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டு, இன்று பல திரை விழாக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது எங்களது முதல் தமிழ் படம். சினிமாவுக்கு மொழி பேதம் இல்லை. விரைவில் இந்தப் படத்தை அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி திரையரங்குகளில் வெளியிடுவோம்” என்றார்.
இந்தப் படம் குறித்து இயக்குநர் ரா.வெங்கட் பேசும்போது, “எங்கள் படத்துக்கு இவ்வளவு பெரிய அரிய அங்கீகாரம் கிடைத்ததைப் பெருமையாக உணர்கிறேன். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் எளிமையான கதை. ஒரு தாத்தா, அவரது பேரன் மற்றும் ஒரு ஆடு ஆகிய மூன்று முக்கிய கதாபாத்திரங்கள். மூவரின் உணர்ச்சிகளே இந்தக் கதையின் உந்து சக்தி. இப்படம் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டபோது, இளைஞர்கள் இக்கதையுடன் ஒன்ற மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள்தான் இந்தப் படத்தை அதிகமாகக் கொண்டாடினார்கள். நான் என் தாத்தா, பாட்டியுடன் வளர்ந்தேன். இந்தத் திரைப்படத்தை உருவாக்கும்போது எனது குழந்தை பருவ நினைவுகளிலிருந்து படத்துக்கான உத்வேகம் பெற்றேன்” என்றார்.
திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பே இந்தப் படத்துக்கு கிடைத்துவரும் உச்சபட்ச பாராட்டுக்களால் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர் இந்தப் படக்குழுவினர்.