இளமையின் ரகசியம் - எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்!

எஸ்.ஏ. சந்திரசேகர்
எஸ்.ஏ. சந்திரசேகர்
Published on

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் முதல் நாளில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் தலைவி கவிதா நிகழ்சியில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

எஸ்.ஏ. சந்திரசேகர் பேசுகையில், “இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் அனைவரும் நலமோடும், வளமோடும், மகிழ்ச்சியோடு நிறைவாக வாழ வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு என்னை யார் என்றே தெரியாது. விஜய்யின் தந்தை என்றுதான் தெரியும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் எப்போது அழைத்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

அப்போது மூத்த பத்திரிகையாளர் ஒருவர். “உங்கள் இளமையின் ரகசியம் என்ன?” என கேட்டதும், சற்றும் தயங்காமல், “என்னைப் பொறுத்தவரை எனது வயதைக் கூறுவதில் நான் தயக்கம் காட்டியதே கிடையாது. எனக்கு 82 வயதுதான் ஆகிறது. என்னுடைய 36 வது வயதிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஜந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நினைத்து தியானம் செய்து வருகிறேன். அந்த எனர்ஜிதான் நான் உற்சாகமாக இருப்பதற்கு காரணம்.

நீங்கள் அனைவரும் செய்து பாருங்கள் நீங்களே உணர்வீர்கள். அதுவே பத்து, பதினைந்து நாட்கள் ஆனதும் பிரச்சினைகளை மறந்து ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். நம்மை சந்தோஷப்படுத்தக் கூடிய கருவி நமது மூச்சுக்காற்று, அந்த மூச்சுக் காற்று உள்ளே செல்வதை நீங்கள் உணரும் போது சந்தோஷம் தானாக வரும். இதை அனைவரும் செய்து பாருங்கள்” என்றார்.

விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் பத்து கிலோ அரிசி வழங்கினார். நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் சங்கத்தின் தலைவி கவிதா நன்றி தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com