
பாலிவுட்டில் முன்னனி நடிகர்களில் ஒருவராகவும், கட்டுடலுடம் வசீகரமும் கொண்ட நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். 59 வயதான பாலிவுட் கிங் நடிகர் சல்மான் கான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிலாக வலம் வருகிறார். பாலிவுட்டின் பைஜான் என்று பிரபலமாக அழைக்கப்படும் அவருக்கு, தொழில்துறையிலோ அல்லது நாட்டிலோ மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த சிக்கந்தர் திரைப்படம் மக்களிடையே ஒரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. கோடிக்கணக்கான சொத்து, அந்தஸ்து, பிரபலம் என அனைத்தும் இருந்தபோது சல்மான் கானுக்கு நிம்மதி மட்டும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பாலிவுட் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான் மீது கடந்த சில ஆண்டுகளாக கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவங்களை தொடர்ந்து நடிகர் சல்மான் கான் தனது பாதுகாப்பை தீவிரப்படுத்திக்கொண்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள் காரணமாக எங்கு சென்றாலும் பலத்த பாதுகாப்புடனே செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் அவர் வெளியே எங்கு சென்றாலும் குண்டு துளைக்காத காரில்தான் செல்கிறார். தன்னுடைய வீட்டிலும் குண்டு துளைக்காத கண்ணாடிகளை பொருத்தி இருக்கிறார். படப்பிடிப்பு நடக்கும் இடத்திலும் அவர் தனக்கு பாதுகாப்பாக, சொந்தமாக பாதுகாவலர்களை வைத்திருக்கிறார். மும்பை போலீசும் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பிற்கு சென்றபோது, பிஷ்னோய் இன மக்கள் தெய்வமாக கருதும் மானை வேட்டையாடியதாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1998-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் 2018-ம் ஆண்டு 5 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பும் வழங்கப்பட்டது. பின்னர் அவருக்கு ஜாமீனும் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரபல கேங்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னாய் தரப்பில் இருந்து சல்மான் கானுக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
அந்த வகையில் சல்மான் கானிற்கு நெருக்கமானவராக இருந்த பாபா சித்திக் சமீபத்தில் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தனக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருப்பதை உணர்ந்த சல்மான்கான், சமீபத்தில் மேலும் ஒரு குண்டு துளைக்காத காரை புதியதாக வாங்கியிருக்கிறார். 'மெர்சிடஸ் மேபச் ஜி.எல்.எஸ். 600' என்ற அந்த காரின் விலை ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும். இந்த கார் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது. இந்தக் காரில், தானியங்கி கியர் பாக்ஸ் வசதியும் இருக்கிறது.
நடிகர் சல்மான் கான் கார் மட்டுமல்லாது சொந்தமாக கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கி இருக்கிறார். ஐபிஎல் போன்று ISPL எனப்படும் indian street premier league என்ற புதிய கிரிக்கெட் பிரிவில் டெல்லி அணியை வாங்கி இருக்கிறார்.
ஒருபுறம் உயிருக்கு அச்சுறுத்தல் மறுபுறம் டிரைஜெமினல் நியூரால்ஜியா, ஏ.வி. மால்பார்மேஷன் போன்ற உடல் பிரச்சனைகளாலும் நடிகர் சல்மான் கான் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.
கோடிகோடியாக பணம் இருந்தாலும் எப்போதும் பயத்துடனே வாழ்வது கொடுமையிலும் கொடுமை.