விமர்சனம்: சீதா பயணம் (2026) - ரொமாண்டிக் டிராமா!
ரேட்டிங்(2.5 / 5)
ஆக்சன் கிங்க் அர்ஜூன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் நாயகியாக நடிக்க கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு என களம் இறங்கி இருக்கும் படம். ஆக்சன் மசாலாவாக இல்லாமல் ஒரு ரொமாண்டிக் டிராமாவாக, ஒரு பீல் குட் மூவியாக எடுக்க முயன்று இருக்கிறார், அவரது முயற்சி வெற்றி பெற்றதா? என்பதைப் பார்ப்போம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி மிகப்பெரிய கோடீஸ்வரரின் மகள். சிறந்த சமையல் கலை நிபுணிஆக பட்டம் பெற்றவர். அம்மா இல்லை, சின்ன வயதில் அம்மா இறந்ததால் அப்பா தான் அவருக்கு எல்லாமே. அப்பாவை விட்டுப்பிரியக்கூடாது என்பதால் காதல், கல்யாணம் இவற்றில் எல்லாம் விருப்பம் இல்லாமல் இருக்கிறார். எப்போது கல்யாணப்பேச்சை எடுத்தாலும் அப்போதே அந்த இடத்தைக்காலி செய்து விடுவார்.
வேறு ஒரு நகரில் நடக்கும் சமையல் கலை சம்பந்தமான கான்பரன்ஸ்க்காக காரில் பயணிக்கிறார். அப்போது முன் பின் தெரியாத ஒருவன் லிப்ட் கேட்கிறான். கொஞ்சம் சந்தேகத்துடன் தான் நாயகி அவனுக்கு லிப்ட் தருகிறாள். வழியில் அங்கங்கே அவள் பயணம் தடைபடுகிறது. இதனால் செல்ல வேண்டிய இடத்துக்குக் கொஞ்சசம் தாமதமாகத்தான் செல்கிறாள். ஆனால் போன உடன் தான் தெரிகிறது. தாமதமாக வந்தது நல்லதாகப்போயிற்று என. ஏன் எனில் அந்த ஹோட்டல் மிகப்பபெரிய தீ விபத்தில் கருகி விட்டது. தான் உயிர் தப்பியதற்கு தனது பயணத்தில் குறுக்கீடாக வந்தவர்கள் தான் என நினைக்கிறார். அவர்களுக்கு ஒரு நன்றி தெரிவிக்கலாம் என நினைக்கிறார். அந்த நன்றி தெரிவிக்கும் படலத்தில் லிப்ட் கொடுத்த இளைஞனிடம் காதல் மலர்கிறது.
ஆனால் ஒரு கட்டத்தில் தன் காதலனும், அப்பாவும் ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள் என்பதை உணர்கிறார். எல்லாமே அப்பாவின் செட்டப்போ என சந்தேகிக்கிறார், இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை.
நாயகி ஐஸ்வர்யா அர்ஜூன் = தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஸ்ருதிகா + ஜோதிகா + சோனியா அகர்வால் மூவரின் முகச்சாயல் இருக்கிறது, சில காமரா கோணங்களில் மூவரையும் தனித்தனியே நினைவுபடுத்துகிறார்.
சிரித்த முகம், நல்ல நடிப்புத்திறன் ஒருங்கே கொண்டவர். நல்ல எதிர்காலம் உண்டு. நாயகன் ஆக நிரஞ்சன் என்பவர். எடுபடவில்லை. நாயகியின் அப்பாவாக சத்யராஜ், நாயகனின் அப்பாவாக பிரகாஷ் ராஜ் இருவரும் குணச்சித்திர நடிப்பில் மிளிர்கிறார்கள். கோவை சரளா கெஸ்ட் ரோலில் வருகிறார். மற்ற அனைவர் நடிப்பும் சிறப்பு. ஆக்சன் கிங்க் அர்ஜூனும் ஒரு ரோலில் நடித்து இருக்கிறார்.
ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். அனூப் ரூபன்சின் இசையில் 4 பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
சண்டைக்காட்சிகளை அர்ஜுனே வடிவமைத்து இருக்கிறார். படம் ரன்னிங்க் டைம் இரண்டரை மணி நேரம், இன்னமும் அரை மணி நேரம் கத்திரி போட்டிருக்கலாம்.
சபாஷ் டைரக்டர்
நாயகனின் நண்பன் தன் காதலியிடம் காதலை சொல்வது எப்படி? என ஐடியா கேட்க அவனுக்கு ஐடியா கொடுப்பது போல அருகில் இருக்கும் நாயகியிடம் காதலை வெளிப்படுத்தும் சீன் கவிதை.
சைக்காலஜி டாக்டர், சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட், அவரது அணுகுமுறை எல்லாம் தமிழ் சினிமாவுக்குக் கொஞ்சம் புதுசு.
ஏற்கனவே வெளிவந்த பயணக்கதைகளான வானம், பையா, திருடா திருடா படக்கதைகளிலிருந்து வேறுபட்டு வித்தியாசமான கதைக்கருவை எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்தது பாராட்டுக்குரிய விஷயம்.
ரசித்த வசனங்கள்
நாம எப்பவும் கத்துக்கிட்டே இருக்கணும், அப்போதான் முன்னேற முடியும்.
ஊருக்குள்ளே கோயில் இருந்தாத்தான் கலாச்சாரம் வளரும், ஊருக்குள்ளே பள்ளிக்கூடம் இருந்தாதான் பகுத்தறிவு வளரும்.
நாம மட்டும் இல்லை, நம்மை சுத்தி இருக்கும் எல்லா ஜீவராசிகளும் நல்லா இருக்கணும்னு நாம நினைக்கனும்.
கெட்டதிலும் நல்லது இருக்கு, நெகடிவ்லயும் சில பாசிட்டிவ்ஸ் இருக்கு.
பணக்காரர்களாகிய நாம் 10 ரூபாய்க்குக்கூட யாரையும் நம்ப மாட் டோம், ஆனால் ஏழையாக இருந்தும் அவ 100 ரூபாய் வாங்காம நம்மை நம்பறாளே?
லவ் பண்ண, பிரப்போசல் அவசியம் இல்லை, அதுதான் மேஜிக் ஆப் லவ்.
மவுனமா இருப்பது எப்பவும் ஒரு முடிவைக்கொடுக்காது, மனம் விட்டுப்பேசனும்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என 5 மொழிகளில் உருவான படம் என பிரமோ செய்திருந்தாலும் தெலுங்கில் எடுத்து அனைத்து மொழிகளிலும் டப் செய்து இருக்கிறார்கள், லிப் சிங்க் சரியாக வரவில்லை.
மெயின் கதைக்கு முக்கியமான காட்சி ஆகிய பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு தீ விபத்து ஏற்படுவது சிஜி ஒர்க் சரியாக அமையவில்லை.
நாயகனின் முகம் நமக்கு சரியாக செட் ஆகவில்லை. நாயகி அளவுக்கு மனதில் நெருக்கம் உண்டாகவில்லை.
படத்தின் தயாரிப்பாளர் என்பதால் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லா விட்டாலும் அர்ஜூனின் கேரக்ட்டருக்கு தந்த முக்கியத்துவம், அவருக்கான ஆக்சன் சீக்வன்ஸ் வலியத்திணிக்கப்பட்டது.
ரவுடியாகவே வாழ்ந்து பல கொலைகள் செய்த ஆள் நாயகியின் ஒரே ஒரு நன்றியில் மனம் மாறி திருந்துவது காதில் பூ.
நாயகியின் பெயர் சீதா, நாயகனின் சொந்த ஊர் பெயர் சீதா புரம், எதேச்சயாக அமைந்த இந்த ஒற்றுமை பற்றி நாயகனோ, நாயகியோ வியந்து சிலாகித்துக்கொள்ளவே இல்லையே?
க்ளைமாக்ஸ் சீன் காதலுக்கு மரியாதை படத்தையும், க்ளைமாக்ஸ் வசனங்கள் பூவே உனக்காக பட வசனத்தையும் நினைவு படுத்துகிறது.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13+ குடும்பத்துடன் பார்க்கலாம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - வித்தியாசமான ஒரு கதைக்களம். பார்க்கலாம், ஆனால் 2K கிட்ஸுக்குப்பிடிக்காது. சென்ட்டிமென்ட் சீன்கள் அதிகம்.

