கமலுக்கு கைகொடுத்துவிட்டு, நைசாக நழுவிய ஷங்கர்!

கமலுக்கு கைகொடுத்துவிட்டு, நைசாக நழுவிய ஷங்கர்!

உலகத் தமிழ் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கிடையே 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் படப்பிடிப்பு தைவான், இத்தாலி, தென்ஆப்பிரிக்கா என படுபிஸியாக நடந்துவந்தது.

படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும், கலை ஆர்வமிக்க உலக நாயகன் கமல்ஹாசன் கேமிராவும் கையுமாக ஒரு பக்கம் சுற்றி வந்தார். அதன் ஒருபகுதியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியிட்டு தனது கலை ஆர்வத்தின் இன்னொரு முகத்தை வெளிக்காட்டினார்.

அந்தவகையில், விமானத்தில், பைலட்டின் அருகே அமர்ந்து, அவரிடம் சில விஷயங்களை கேட்டு கற்றுக்கொள்ளும் புகைப்படம், அவரது அறையில் இருக்கும் ஒரு பொருளின் மீது தனது கைகளால் தட்டியே இசையை வரவழைப்பது குறித்த வீடியோ, கையில் கேமிராவுடன் ஸ்டைலான நடை என அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

கமல் இப்படி ஒருபக்கம் குஷிப்படுத்த, இயக்குநர் ஷங்கரோ ஒரே நேரத்தில் கமல்ஹாசனின் 'இந்தியன் 2', ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' என இரண்டு பிரம்மாண்ட படங்களை எடுத்துவரும் நிலையில் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இன்று 'இந்தியன் 2' படத்தின் இயக்குநர் ஷங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு கைகொடுத்து மகிழ்ச்சியை தெரிவிப்பது போன்ற ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, 'உங்களுடைய சக்திவாய்ந்த நேரத்தை ஒதுக்கியதற்கு மிக்க நன்றி. மீண்டும் மே மாதம் சந்திப்போம்' என்று கூறி, 'இந்தியன் 2' -வில் இருந்து விடைபெற்று 'கேம்சேஞ்சர்' க்ளைமாக்ஸ் காட்சி எடுக்க செல்கிறேன்' என பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஷங்கர்.

ஷங்கர் இயக்கிவரும் இரண்டு படங்களுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் என்பதால், எந்தப் படம் முதலில் திரைக்கு வந்தாலும், அது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

logo
Kalki Online
kalkionline.com