'பேரழகிங்கிறதை தாண்டி ஓர் அற்புதமான ஆன்மா அவள்' - ஆச்சரியங்கள் நிறைந்த சில்க் ஸ்மிதா!

Silk Smitha
Silk Smitha
Published on

ஒருவரை எதுவாக பார்க்கிறோமோ, அதுவாகவே அவர்களின் பிம்பம் நம்மில் தங்கிவிடுகிறது. அப்படித்தான் சில்க் ஸ்மிதாவும்! உடல் வனப்பும், கவர்ச்சியும் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தவர்களுக்கு சில்க் ஸ்மிதாவின் ஈர மனசும், தங்க குணமும் தெரிந்திருக்க நியாயமில்லை.

இயற்கையிலேயே துள்ளும் அழகை பெற்றிருந்தார் விஜயலட்சுமி என்கிற சில்க். இவரது இளம் வயதில் யாரையுமே கேட்காமல் நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டது வறுமை. தரித்திரம் கூரை மீது ஏறி தாண்டவமாடி மிரட்டியது. பசி ஒரு பக்கம், மாமியார் கொடுமை ஒரு பக்கம் என ஒரேடியாக மென்று தின்றுவிட்டது.

இறுதியில் வஞ்சம் இல்லாமல் வழிந்து நிறைந்த அழகுதான் சில்க்கை காப்பாற்றியது. அப்போது சில்க்-க்கு 18 வயது. ஏவிஎம் ஸ்டூடியோ முன்பு ஒரு மாவு மிஷினில் மிளகாய் அரைக்க வந்திருந்தபோது தான் வினுசக்கரவர்த்தியின் கண்களில் பட்டுள்ளார். அவரது தயவால், வண்டி சக்கரம் சுழல சுழல இவரது வாழ்க்கையும் வேகமாக சுழன்று முன்னேறியது.

பளபள முகம், செக்க செவேல் நிறம் கொண்ட நடிகைகள்கூட சில்க்கை பார்த்து ஆச்சரியமும், பொறாமையும் அடைந்தனர். முகத்தில் எதுவுமே இல்லாத அந்த வெறுமை, முகசாயங்களே இல்லாத அந்த பொலிவு... அனைவரையுமே சுண்டி இழுத்தது.

ஆளுமை போதை ஏறிய கண்களுடன் 'வா மச்சான் வா' என்று பாட, அப்போது கிறங்கி பார்த்த ரசிகர்கள், கடைசிவரை அப்படியேதான் அவரை பார்க்க விரும்பினர். ஒரு படத்தில் ஹீரோ இருப்பதுபோலதான் சில்க்கும், அன்றைய காலகட்ட படங்களில் நிறைந்திருந்தார். ஒரு பாட்டுக்குத்தான் வருவார். ஆனால் போஸ்டரில் ஹீரோ ஒருபுறம் என்றால் சில்க்கும் மறுபுறம் நம்மை பார்த்து கொண்டு சிரிப்பார். அந்த அளவுக்கு ஒரு ஆளுமை இருந்தது சில்க்கிடம்.

Silk Smitha
Silksmitha

அரைகுறை ஆடை, முக்கல், முனகலுடன் கவர்ச்சி நடனம் ஆடினாலும் தங்கள் வீட்டு பெண்ணாகவே சில்க்கை பார்க்கும் மனோபாவம் நம் மக்களிடம் இருந்தது. சில்க்கை தவிர வேறு எந்த கவர்ச்சி நடிகைக்கும் கிடைக்காத அந்தஸ்து இது!

ஒருமுறை 'நடிக்க வராட்டி என்னவா ஆகியிருப்பீங்க' என்று கேள்வி கேட்டதற்கு, 'நக்சலைட் ஆகியிருப்பேன்' என்று சொன்ன பதில் பலருக்கும் தூக்கி வாரிப்போட்டது. அந்த அளவுக்கு முதலாளிகளின் கொடுமைகளை ஆந்திராவில் அனுபவித்தவர் அவர்.

இறுதிவரை, சதைப்பிண்டமாகவே மக்கள் முன் உலவிய சில்க் ஒரு தங்கமான மனசுக்கு சொந்தக்காரி. எனினும், தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒரு கோபக்காரியாக காட்டி கொள்ள வேண்டிய நிலைமை அவருக்கு அந்த காலகட்டத்தில் இருந்தது. ஏகப்பட்ட வலிகளுடன்தான் இவரது பயணம் தொடங்கியது.

ஷூட்டிங்கில் சிவாஜி கணேசன் வரும்போதெல்லாம் எல்லோருமே மரியாதைக்காக எழுந்துநிற்கும்போது, சில்க் மட்டும் சேரில் உட்கார்ந்து இருப்பாராம். இதை பற்றி அவரிடம் அங்கிருந்தோர் பதறிகொண்டு கேட்டதற்கு, 'நான் எழுந்து நின்னா, என்னுடைய குட்டி டிரஸ் சிவாஜி சாருக்கு கூச்சத்தை தந்துடுவிடும். அவருக்கு அந்த தர்மசங்கடம் வரக்கூடாதுன்னுதான் உட்கார்ந்தே இருக்கேன்' என்றாராம்.

கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இந்த பெண் இப்படி டான்ஸ் ஆடுகிறாரே என்று சிலர் முகம்சுழித்த நிலையிலும், அடுத்தவரின் கூச்சத்தையும் மதித்து நடந்த சில்க் மனசு பற்றி பலர் அறியவில்லை!

இதையும் படியுங்கள்:
படமாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை... இவரா ஹீரோயின்?
Silk Smitha

ஒரு காலகட்டத்தில் சில்க் பற்றி வதந்திகள் வராத பத்திரிகைகளே இல்லை. எத்தனை கேவலங்கள், அவதூறுகள், உயரங்கள், பள்ளங்கள், வந்தாலும் கலங்காமல் அவற்றை துணிச்சலுடன் கடந்துள்ளார். ஆனால், தனக்கு என்ன தேவை என்பதை மட்டும் கடைசிவரை அறிந்து கொள்ள முடியாத அப்பாவியாகவே இருந்துள்ளார். திமிர் பிடித்தவள் என்ற பெயரை அனாயசயமாக தட்டி சென்ற சில்க், நிஜத்தில் ஒரு மிருதுவான குழந்தை என்பதை நெருங்கி பழகியவர்கள் மட்டும் இன்னமும் சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.

வறுமையால் நக்சலைட் ஆக மாற நினைத்தார், ஆனால் முடியவில்லை. நடிப்பில் சாவித்ரி போல வரவேண்டும் என்று நினைத்தார், அதுவும் நடக்கவில்லை. கல்யாணம், குழந்தை குட்டியுடன் சராசரி குடும்ப வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். அதுவும் ஈடேறவில்லை... கடைசியில் அவர் ஆசைப்படாத மரணம் 35 வயதிலேயே இழுத்து கொண்டு போய்விட்டது! அதன் மர்ம முடிச்சுகளை இன்னும் யாராலும் அவிழ்க்க முடியவில்லை!

இறுதி நாட்களில் சமூக ஒழுக்கம், சமூக கட்டுமானம் என்ற வரையறைக்குள் இவரை கொண்டு வந்து பெரும்பாலானோர் பார்க்கவேயில்லை. தன் அகத்தை யாராவது விரும்பி ஏற்று கொள்வார்களா என்ற ஏக்கத்திலேயேதான் இறுதி நாட்கள் கழிந்திருக்கின்றன. வலி நிறைந்த வாழ்க்கையின் மீது, பிடிப்பு தளர்ந்த நிலையிலும், சுற்றியுள்ளவர்களின் மீது நம்பிக்கையிழந்த நிலையிலும், பழிகள், காயங்கள் எல்லை மீறிய சூழலிலும்தான் அப்படி ஒரு சோக முடிவை எடுத்திருப்பார் போலும்.

'சில்க்குக்கும் எனக்கும் அடுத்த பிறவின்னு ஒன்னு இருந்தா, அவ எனக்கு மகளா பிறக்கணும்னு ஆசைப்படுறேன்' என்று கண்கலங்கி வினுசக்ரவர்த்தி ஒருமுறை சொல்லியிருந்தார் என்றால், அதற்கு காரணம் சில்க்-ன் வெள்ளை மனசுதான்!

இன்றளவும் தென்னிந்தியாவில் பேசப்படும் ஆளுமையாக சில்க் திகழ்கிறார். ஆந்திரத்திலிருந்து கரையை கடந்து தமிழகம் வந்த இந்த 'கவர்ச்சி புயல்' ஒருபோதும் கரையை கடக்க நம் மக்கள் விட்டதே இல்லை.

ஒருமுறை பாலுமகேந்திரா சொன்ன இந்த வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றன... 'ஒரு பேரழகிங்கிறதை தாண்டி எத்தனை அற்புதமான ஆன்மா அவள்' என்றார் பாலுமகேந்திரா.                           

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com