அடிமைப்பெண் முதல் அண்ணாத்த வரை.. இசையால் உலகையே கட்டி போட்ட ஜாம்பவான் SPB..!

SPB
SPB
Published on

ரை நூற்றாண்டுகளாக இசையுலகில் கொடிகட்டி பறந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இவ்வுலகை விட்டு பிரிந்த தினம் இன்று. 70’ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவரது நெஞ்சிலும் குடியிருக்கும் எஸ்.பி.பி. பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி நம்மை மகிழ்வித்துள்ளார்.

'அடிமைப் பெண்’ முதல் ’அண்ணாத்த’ படம் வரை பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

தலைமுறை இடைவெளி காணாத ஒரேஒரு பாடகராக தமிழ் திரையுலக வரலாற்றில் எஸ்பிபி விளங்கி நிற்கிறார். 1966 ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று தலைமுறைகளை கண்டவர், 16 மொழிகளுக்கு மேல் பாடியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னிலை பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஒரு ஆளுமை.

ஒவ்வொரு தலைமுறையினருக்கு ஏற்றவாறு பாடி அந்தந்த தலைமுறையினரின் மனதில் இடம்பிடித்து கடைசி மூச்சு வரை அவரது இனிமையான குரலில் பாடல்களை பாடி உயிர் பிரிந்த உத்தமர். ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலம்மா தம்பதியினருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொணடம்மாபேட்டை கிராமத்தில் ஜூன் 4ஆம் தேதி 1946 அன்று பிறந்தார்.

தந்தை சாம்பமூர்த்தி ஒரு இசைக் கலைஞர் என்பதால் எஸ்பிபிக்கு இளம் வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தது. தந்தையின் இசையமைப்பை கவனித்து இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார். இசை ஆர்வம் ஒருபுறம் இருக்க, பொறியாளராக வேண்டும் என்பதுதான் எஸ்பிபியின் ஆசையாக இருந்தது.

பொறியியல் இரண்டாமாண்டு படிக்கும்போதே பாட வாய்ப்பு கிடைத்தது. ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் நடிகை ரமாபிரபாவின் பிறந்தநாளுக்கு ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ என்று பாடிக்கொண்டே அந்த காட்சியில் தோன்றுவார் எஸ்பிபி. இதுதான் அவரது முதல் அரங்கேற்றம்.பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, துளு என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்துக்கொண்டார்.

கடைசியில் ரஜினியின் அண்ணாத்த பட பாடலை பாடியுள்ளார். பாடலை பாடியன்று அவருக்கு தெரியாது, இது தான் அவரது கடைசி பாடல் என்று.. பாடல் வெளிவருவதற்குள் இறைவனடி சேர்ந்துவிட்டார். எஸ்பிபிக்கு அன்பு செலுத்த மட்டுமே தெரியும் என பலரும் தெரிவிப்பார்கள். யாரும் கண்கலங்கினால் அவரால் தாங்க முடியாது என்று அவருடன் பழகிய நபர்கள் கூறுகின்றனர்.

அவ்வபோது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வரும் எஸ்பிபி குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் காட்சிகள் நம் கண்ணில் இருந்து நீங்காது. உருவத்தில் பெரியதாக இருந்தாலும், மனதால் கடைசி மூச்சு வரை குழந்தையாகவே வாழந்து சென்றிருக்கிறார். எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று இவர் பாடிய பாடலுக்கு ஏற்ப நம்மிடம் இசையாகவே மலர்ந்து இசையாகவே மறைந்துள்ளார். ஆன்மீகம், நிகழ்ச்சி, மெலோடி, குத்து என அனைத்து ஜானர்களிலும் இசையால் இவரது குரல் எங்கும் ஒளித்து கொண்டே தான் இருக்கும். இசை உள்ள வரை என்றும் எஸ்.பி.பி வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com