Interview: உண்மையான 'அப்துல் - கலையரசி'க்கு என்ன ஆனது? - நிஜத்தை உடைத்த 'சிறை' பட இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி!
சிறை: கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி, விமர்சகர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, 2025 ஆம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள நல்லதொரு படம். காவல் துறையினரை தவறானவர்களாக சித்தரிக்கும் படங்களுக்கு மத்தியில் காவல் துறையினரின் மனிதாபிமான பக்கத்தையும் காட்டியுள்ளது இந்த படம். பலரின் பாராட்டை பெற்று வரும் இப்படத்தின் இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி கல்கி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் இங்கே...
அதென்ன சுரேஷ் ராஜகுமாரி என்று வித்தியாசமாக பெயர் வைத்துள்ளீர்கள்?
ராஜகுமாரி என் அம்மாவின் பெயர். அம்மாவின் நினைவாக அம்மா பெயரை சேர்த்து வைத்துள்ளேன்.
நீங்கள் வெற்றி மாறனிடம் உதவியாளராக இருந்தீர்கள். விசாரணை, விடுதலை என வெற்றி மாறனின் படங்கள் காவல் துறையினர் நடத்திய மனித உரிமை மீறல்கள் பற்றி பேசின. உங்களின் சிறை காவல் துறையினரின் மனிதாபிமான பக்கத்தை காட்டுகிறது. வெற்றி மாறனிடம் இருந்து உங்களை வித்தியாசமாக காட்டி கொள்வதற்கு தானே இந்த முயற்சி?
இல்லை. கண்டிப்பாக இல்லை. இப்படத்தின் கதையை எழுதியவர் தமிழ். தமிழ் காவல் துறையில் பணியாற்றியவர். இதற்கு முன் டாணாக்காரன் படத்தை இயக்கி உள்ளார். இவர் பணியாற்றிய காலகட்டத்தில், தான் சந்தித்த அனுபவத்தின் பின்னணியில் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளார். கதை சிறப்பாக அமைந்தது. மற்ற படி வித்தியாசமாக என்னை காட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் அல்ல.
பொதுவாக தமிழ் சினிமாவில் கதை யாரிடம் இருக்கிறதோ அவர்கள்தான் படத்தையும் இயக்குவார். அறிமுக இயக்குனரான உங்களிடம் தமிழ் தனது கதையை தந்ததன் ரகசியம் என்ன?
தமிழ் அவர்களும் வெற்றி மாறனிடம் உதவியாளராய் இருந்தவர் தான். இதுவும் கூட தமிழ் என்னை நம்பி கதையை தந்ததற்கு ஒரு காரணம். மேலும், டாணாக்காரன் பட வெற்றிக்கு பிறகு தமிழ் ஒரு பெரிய படத்தை இயக்க கமிட் ஆனதால் இந்த படத்தை இயக்க முடியவில்லை. என்னிடம் இயக்கும் படி கேட்டார். எனக்கு கதை பிடித்திருந்து. இயக்க ஓகே சொல்லி விட்டேன்.
இந்த படத்தில் காதலர்களாக வரும் அப்துல் - கலையரசி கதாபாத்திரங்ககளின் உண்மையான பெயர்கள் என்ன?
உண்மையான காதலர்களின் பெயரை நானும், கதாசிரியரும் குறிப்பிட விரும்பாததால் அப்துல் - கலையரசி என்ற பெயர்கள் வைத்தோம்.
படத்தின் முடிவில் காதலர்கள் ஒன்று சேர்வது போல காட்டியுள்ளீர்கள். உண்மையான காதலர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா?
உண்மையை சொன்னால் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் அவர்கள் காவல் துறையில் பணியாற்றிய போது நிஜ அப்துலுடன் நீதிமன்றத்திற்கு வாய்தாவுக்கு சென்றிருக்கிறார். அடுத்த முறை வாய்தாவுக்கு செல்லவில்லை. அப்துல் தனது காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா? நீதிமன்றத்தால் விடுவிக்க பட்டாரா? என்பதும் தமிழுக்கு தெரியாது. ஒரு காவலராக தன் அதிகாரத்தை பயன்படுத்தி அப்துலுக்கு உதவி இருக்கிறார். ஒரு காவலர் நினைத்தால், தன் அதிகாரத்தை பயன்படுத்தி எளிய மக்களுக்கு உதவ முடியும் என்பதை உணர்த்த ஒரு பாசிட்டிவான முடிவை வைத்தோம். உண்மையான அப்துல் - கலையரசி இந்த சிறை படத்தை பார்க்க நேர்ந்தால் எங்களை தொடர் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.
கதாபாத்திரத்திற்கு புனை பெயர் வைத்தது ஓகே... அனால் அப்துல் என்ற இஸ்லாமிய பெயரை வைத்ததற்கு காரணம் என்ன?
சமீப காலமாக இஸ்லாமியர்கள் மீதான தவறான பிம்பம் பல்வேறு தளங்களில் வைக்கப்படுகிறது. நான் சந்தித்த, எளிய மனிதர்கள் பலர் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இஸ்லாமியர்கள் மீதான என் அபிப்ராயத்தை பதிவு செய்யவே காதலனை இஸ்லாமியனாக காட்டி உள்ளேன்.
கதாசிரியர் தமிழ் அவர்களின் கதா பாத்திரத்தை தான் விக்ரம் பிரபு அவர்கள் படத்தில் செய்திருக்கிறார்.
ஒரு தயாரிப்பாளர் தன் மகனை ஹீரோவாக்கினால் மாஸ் ஹீரோவாக அறிமுகப்படுத்துவார். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் லலித் மிக எளிமையாக, ஒரு சாதாரணமான கதாபாத்திரத்தில் தன் மகன் அக்ஷய்யை அறிமுகம் செய்துள்ளார். இந்த மாற்றம் எப்படி நடந்தது?
தயாரிப்பாளர் லலித் அவர்கள் சினிமாவை பற்றி நன்றாக புரிந்து கொண்டவர். விஜய், பிற பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரித்தவர். எனவே ஒரு படத்தின் பலம், பலவீனம் பற்றி நன்றாக லலித்திற்கு தெரியும். இந்த கதையை லலித் அவர்களிடம் சொன்னவுடன் இந்த கதை என் மகனுக்கு சரியாக இருக்கும் என்று சொல்லி உற்சாக படுத்தினார்.
போலீஸ் காரர்கள் பயன்படுத்தும் சம்பாஷனைகள், கோர்ட்டில் காவல் துறையினர் - வக்கீல்கள் பேசும் விதம் போன்றவை மிக யதார்த்தமாக இருந்தது. எப்படி சாத்தியமானது?
கதாசிரியர் தமிழ் அவர்களே முன்னாள் காவல் துறை நபராக இருந்தது முக்கிய கரணம். மேலும் காவல் துறையை சேர்ந்த சசி என்ற இளைஞர் உதவி இயக்குனராக இருந்தார். இவர் சொன்ன பல்வேறு தகவல்கள் எனக்கு பல காட்சிகளை குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியை சிறப்பாக எடுக்க உதவியாக இருந்தது.
படத்தில் காட்டப்பட்ட அனைத்து விஷயங்களும் உண்மைக்கு நெருக்கமாக இருந்ததாக உறுதியாக சொல்ல முடியுமா?
உறுதியாக சொல்ல முடியாது. ஒரு வாய்தாவிற்கும் அடுத்த வாய்தாவிற்கும் இடையே மூன்று முதல் ஆறு மாத இடைவெளி இருக்கும். ஆனால் சினிமாவில் அடுத்த வாய்தா அடுத்த காட்சியில் வருவது போல சொல்லியிருப்போம். யதார்த்தத்தில் இந்த ஆறு மாத காலத்தில் என்ன நடந்தது என்று நமக்கு தெரியாது. இந்த இடை வெளியை புனைவுகளை இட்டு நிரப்புவோம். இதை தவிர்க்க முடியாது. பதவியில் இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எளிய மக்களுக்கு உதவ முடியும் என்று சொல்லும் முயற்சிதான் இந்த சிறை.
உங்களின் அடுத்த படம் உங்கள் கதையாக இருக்குமா? அல்லது பிறரின் கதையை படமாக்குவீர்களா?
என் அடுத்த படம் கண்டிப்பாக என்னுடைய கதையில் தான் இருக்கும். இருந்தாலும் சிறந்த நாவல்களை, பிறர் எழுதிய கதைகளை படமாக்க எனக்கு தயக்கம் கிடையாது.

