
சங்கிலி படத்தில் தனது அப்பா சிவாஜி கணேசனுடன் அறிமுகம் ஆகி சில படங்களில் சிவாஜி அவர்களுடன் இணைந்து நடித்து பின்னர் தனி ஹீரோவாக பல வெற்றி படங்களை தந்தார் பிரபு.
இவரது நூறாவது படமான ராஜகுமாரன் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியானது. ராஜா வீட்டு பிள்ளை என்று தமிழ் சினிமாவில் செல்லப் பெயருடன் அழைக்கப்படுபவர் பிரபு. இதனால்தான் பிரபு நடித்த நூறாவது படத்திற்கு ராஜகுமாரன் என்று பெயர் வைத்ததாக சொன்னார் படத்தின் டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்.
120 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்த பிரபு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் குணசித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தற்போது பிரபு தனது தந்தை சிவாஜி அவர்களை நினைவு கூறும் டைட்டில் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 1958 ல் சிவாஜி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'உத்தமபுத்திரன்'. தற்போது பிரபு 'ராஜபுத்திரன்' என்ற படத்தில் ஹீரோ வெற்றிக்கு அப்பாவாக நடிக்கிறார். சிவாஜியின் உத்தமபுத்திரன் தலைப்பில் இருந்து புத்திரன் என்ற பெயரையும், பிரபு நடித்த ராஜகுமாரன் படத்திலிருந்து ராஜ என்ற பெயரையும் எடுத்து ராஜபுத்திரன் என்று பெயர் வைத்திருக்கிறார் டைரக்டர் மகா கந்தன்.
பிரபு - சிவாஜி ரசிகர்களை கவர்வதற்காகவே இந்த டைட்டில் வைத்திருப்பதாக சொல்கிறது சினிமா வட்டாரம். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் ஹீரோ வெற்றி, "இந்த படத்தில் எனக்கு அப்பவாக நடிக்கிறார் பிரபு சார். என் மகன் ராஜபுத்திரன் என்று படத்தில் ஒரு இடத்தில் சொல்வார் பிரபு சார். உண்மையில் தமிழ் சினிமாவில் ராஜபுத்திரன் பிரபு அண்ணன் தான். இந்த டைட்டிலுக்கு சரியான பொருத்தம் அண்ணன் மட்டுமே" என்கிறார்.
ஆடியோ விழாவில் பேசிய பிரபு "இன்று எனக்கு உடம்பு சரியில்லை. இருந்தாலும் இந்த டைட்டிலுக்காகவும், படகுழுவினருக்காகவும் நான் வந்தேன்" என்றார். பிரபு, தான் நடித்த படம் மூலமாக, இது வரை 74 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த தகவலை பிரபு அவர்களே ராஜபுத்திரன் ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் குறிப்பிட்டார்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மறைந்து இத்தனை ஆண்டுகளில் தனது படங்கள், நடிப்பு தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் வழியாக நினைவு படுத்த பட்டு கொண்டே இருக்கிறார். இதனுடன் சேர்த்து இந்த முறை தன் மகன் பிரபு நடிப்பில் வெளிவரும் ராஜபுத்திரன் படத்தின் தலைப்பு வழியாக நினைவு கொள்ளப்படுகிறார். பிரபு நடிப்பில் வெளிவரும் ராஜபுத்திரன் வரும் மே 30 அன்று திரைக்கு வர உள்ளது.