மிக்ஜாம் புயலால் சென்னை பாதிக்கப்பட்ட நிலையில், நடிகர் சிவகார்த்திக்கேயன் ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில் புயல் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி ஒரு மாத சம்பளத்தை வழங்கியதோடு, தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு நிவாரணத்திற்கு நிதியுதவி அளிக்குமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார்.
இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மிக்ஜாம் புயல் – கன மழையைத் தொடர்ந்து திமுக அரசு பல்வேறு நிவாரணப் பணிகளை இடைவிடாது மேற்கொண்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிக்கு துணை நிற்கிற விதமாக, நிறுவனங்கள், இயக்கங்கள், தனிநபர்கள் என பலரும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நம்மை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்த போது, ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நம்மிடம் வழங்கினார். அவருக்கு அன்பும், நன்றியும். ஒன்றிணைந்து செயல்படுவோம். இயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட துயர் துடைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்