தமிழ் சினிமாவில் மிகவும் அரிதாக ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் வருகின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து, S. G. சார்லஸ் இயக்கி உள்ள சொப்ன சுந்தரி படம் இந்த வகையை சேர்ந்தது.
ஒரு பிரபல தங்க நகைக்கடை தங்களிடம் நகை வாங்குபவர்களுக்கு ஒரு கூப்பணை வழங்கி பூர்த்தி செய்ய சொல்கிறது. இந்த கூப்பன்களை குலுக்கள் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்க முடிவு செய்கிறது. இதன்படி அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) என்ற பெண்ணிற்கு பத்து லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக கிடைக்கிறது.
இதை அகல்யா குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் பெற்று கொள்கிறார்கள்.
ஆனால் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு போன அகல்யாவின் அண்ணன் (கருணா) கடையில் நகை வாங்கியது நான்தான் எனக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார். நகையை அண்ணன் வாங்க வில்லை. வேறு யாரோ ஒருவருக்காக வாங்கி தந்துள்ளார் என்பதை அகல்யா கண்டு பிடிக்கிறார்.
நகை வாங்கிய ரசீதையும் கண்டறிகிறார். பிரச்சனை போலீஸ் ஸ்டேஷன் வரை செல்கிறது. இரு தரப்பும் பல்வேறு வேலைகளை செய்து காரை தனதாக்க முயற்சி செய்கின்றனர். இறுதியில் கார் யாருக்கு சொந்தமாகிறது எனபதை கொஞ்சம் நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.
பரிசுப் பொருளும் அதற்கு பின் உள்ள பிரச்சனைகளை பற்றி சொன்னதற்காக டைரக்டரை பாராட்டலாம் படத்தின் முதல் பாதி வேகமாக நகர்கிறது. ஆனால் பின் பாதி கொஞ்சம் பரபரப்பு குறைவாக உள்ளது. படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருந்தாலும் நகைச்சுவையால் மறந்து விடுகிறோம்.
பின்னணி இசை கதைக்கு வலு சேர்க்க மறுக்கிறது. பாலமுருகன் - விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவும் ரவிபாண்டியனின் கலை இயக்கமும் கதைக்கள சூழலை நன்றாக காட்டுகின்றன.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பிலும், கதாபாத்திர தேர்விலும் மறைந்த நடிகை சுஜாதாவை நினைவுப்படுத்துகிறார். விளிம்பு நிலை குடும்பத்தில் இருந்து ஒரு போராடும் பெண்ணை கண் முன் காட்டுகிறார். லக்ஷ்மி பிரியா வாய் பேச முடியாத ரோலில் நிறைய ஹோம் ஒர்க் செய்து இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கிங்ஸ்லி எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான காமெடி காட்சிகளில் வருகிறார் மாற்றி கொண்டால் நலம். இன்ஸ்பெக்டராக நடிக்கும் சுனில்ரெட்டி நாம் வெறுக்கும் அளவுக்கு ஒரு மோசமான போலீஸ் அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார்.
இப்படத்தின் அழகான ஒன் லைனை செழுமைப்படுத்தி ஒரு சரியான திரைக்கதையில், இனிமையான இசையில் தந்திருந்தால் சொப்பன சுந்தரி நம்மை சொக்க வைத்திருப்பாள். சொப்பன சுந்தரி -சுமாரான சுந்தரி.