
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி 2ம் பாகத்தை எடுப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று படத்தின் இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவிக்கு தனி அடையாளத்தை கொடுத்த படங்களில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் முக்கியமானதாகும்.
2004 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை ஜெயம் ரவியின் சகோதரர் மோகன் ராஜா இயக்கியிருந்தார். படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி நடித்திருந்தார். மேலும் படத்தில் நதியா, அசின், பிரகாஷ்ராஜ், விவேக், ஜனகராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
அதேசமயம் தெலுங்கில் வெளியான அம்மா நானா ஒ தமிழ் அம்மாயி என்ற படத்தின் ரீமேக் தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்றாலும் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு மாற்றங்களை செய்திருந்தார் மோகன் ராஜா, இதனால் தமிழ்நாட்டில் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் மோகன் ராஜா எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார். ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் ஒன்றான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இரண்டாம் பாகத்திற்கான கதைகள் எழுதி முடிக்கப்பட்டு விட்டது.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும். இத்திரைப்படத்தில் நதியா கதாபாத்திரம் இருக்காது. அதே சமயம் மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பட பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.