
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம், சூரி ஹீரோவாக நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம் மற்றும் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ ஆகிய மூன்று படங்களும் ஒரே நாளில் (மே 16-ம்தேதி) வெளியாக உள்ளதால் இந்த ரேசில் முந்த போவது யார் என்பது குறித்து ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துளளன. அதுமட்டுமின்றி தமிழ் திரைத்துறையில் நகைச்சுவைக்கு தனி இடமும் உண்டு. நகைச்சுவை நடிகர்களாக வலம் வந்தவர்கள் பின்னாளில் கதாநாயகனாகவும் உயர்ந்துள்ளனர். அந்த வகையில் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக இருந்த சூரி, சந்தானம் மற்றும் யோகிபாபு ஆகியோர் தற்போது ஹீரோக்களாகவும், நகைச்சுவை நடிகர்களாகவும் நடித்து வருகின்றனர்.
சந்தானம் ஹீரோவாகவே தொடர்ந்து நடித்து வருகிறார், சூரி 'விடுதலை' படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார், யோகிபாபு நகைச்சுவை நடிகராகவும், அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய சூரி, ‘விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். ‘விடுதலை-2', ‘கொட்டுக்காளி', ‘கருடன்' என கதாநாயகனாக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் சூரியின் நகைச்சுவை வாழ்க்கைக்குத் திருப்பு முனையாக அமைந்தது மட்டுமின்றி அவரை நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கு உதவியது என்றே சொல்லாம். நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்ததை போன்று விடுதலை திரைப்படம் அவரை ஹீரோவாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தியது.
அந்தவகையில் தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் அவர் ‘மாமன்' என்ற புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். இந்த படம் வருகிற மே 16-ந்தேதி வெளியாகிறது.
இதற்கிடையில் நகைச்சுவையில் மக்களின் மனங்களை கவர்ந்த யோகிபாபு, தற்போது டாப் காமெடியனாக வலம் வருகிறார். இவர் நடித்த ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் இவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். நகைச்சுவையில் அசத்தி வரும் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஜோரா கைய தட்டுங்க' படமும் அதே மே 16-ந்தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ரேசில் முந்த போவது சூரியா, சந்தானமா? யோகிபாபுவா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வார்த்தை யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக நடித்து வரும் மூவரின் படங்களும் போட்டியில் இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.