நெஞ்சை உருக்கும் இனிய குரலில் காதலர்களை ஈர்த்த கானம்! 'பூங்கதவே தாழ் திறவாய்' புகழ் பாடகி உமா ரமணன் மறைவு: அஞ்சலி!  

Playback singer Uma Ramanan
Playback singer Uma Ramanan

 நம் வாழ்வின் அனைத்து தருணங்களையும் உள்ளடக்கி அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்ப ஆறுதல் அளிக்கும் அல்லது மகிழ்ச்சிப் படுத்தும் ஆற்றல்கொண்டது இசை. தங்கள் குரலினிமையினால் நம்மைக் கட்டிப்போட்ட பாடகிகள் பலருண்டு. அவர்களில் ஒருவர்தான் மென்மையான குரலில் பாடி நம்மை வசீகரித்த உமா ரமணன் அவர்கள்.

தமிழ்த் திரையுலகின் பின்னணிப் பாடகிகளில் ஒருவரான உமா ரமணன் (69) உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னை அடையாறு, காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (மே1) இரவு காலமானார் எனும் தகவல் இசை ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

சற்றே ஒடிசலான உடல்வாகுடன் புடவை முந்தானையை இழுத்துப் போர்த்தியபடி, அசையாமல் நின்று, பாடலில் மட்டுமே கவனத்துடன் இருந்து, உமா ரமணன் மேடைகளில் பாடுவதை ரசித்து மகிழ்ந்தவர் நிறைய பேர்.

கணவர் ரமணன் நடத்தி வந்த மியூசியானோ குழுவின் மெல்லிசை நிகழ்ச்சிகளில் திருமணத்துக்கு முன்பே பங்குபெற்று பாடி வந்த உமா ரமணன் கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இசையில் உருவான ‘பூங்கதவே தாள் திறவாய்’ என்ற அற்புதமான பாடல் மூலம் திரை உலகில் பாடகியாக அறிமுகமானார் .

அவரின் வசீகரமான குரலுக்கு அடுத்தடுத்து வந்த வாய்ப்புகளில் திரையிசைப் பாடல்களுக்குள் அழுத்தமாகக் குரல் பதித்தார். எம்எஸ்வி, இளையராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட பிரபல இசை அமைப்பாளர்கள் இசையில் பல வெற்றிப் பாடல்கள் பாடியுள்ள அவர், இளையராஜா இசையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளதும் அவற்றில் பெரும்பாலானவை ஹிட் பாடல்களாக ரசிகர்கள் முணுமுணுத்ததும் இவரது சிறப்பு.

திரைப்படப் பாடகியாக மட்டுமின்றி இசைத்துறை சார்ந்த கணவர் ஏவி ரமணன் உடன் இணைந்து ஆயிரக்கணக்கான மேடைகளில்  பாடல்கள் பாடி உள்ளார். இவரது கணவர் ரமணணும் பாடல்கள் பாடியதுடன் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். தம்பதியர் இருவரும் ஒரே துறை என்பதால் இவர்களைப் பற்றி அறிந்து பாராட்டியவர் பலர்.]

இதையும் படியுங்கள்:
சின்னத்திரையில் வடிவேலு: சம்பளம் 1 கோடியாம்மே!
Playback singer Uma Ramanan

80களில் பிரபலமாக இருந்த உமா ரமணன் 90களிலும் நிறைய ஹிட்டுகளைத் தந்தது குறிப்பிடத்தக்கது. ‘நிழல்கள்’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘தில்லுமுல்லு’, ‘திருப்பாச்சி’, ‘தர்மதுரை’ போன்ற வெற்றிப்படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார்.

தெளிந்த நீரோடை போன்ற மென்மையான, இனிமையான ‘நிழல்கள்’ திரைப்படம் முதல் ‘திருப்பாச்ச’வரை அவர் பாடிய பல சூப்பர் ஹிட் காதல் பாடல்கள் இசைக் காதலர்களுக்கு காலத்தால் அழியாதப் பாடல்களாக வலம் வருகின்றன இன்றும்.

கடந்த 35 வருடங்களாக 6000த்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இசைப் பிரியர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த உமா ரமணன் மறைவிற்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com