கதையா? கதாநாயகனா? மலையாள சினிமாக்களின் வெற்றிக்குக் காரணமாவது எது?

Malayalam cinema
Malayalam cinema
Published on

‘இந்தியன் 2’ படம் வெளியாவதற்கு முன்பு நடைபெற்ற பட பிரமோஷன்களில் இந்தியன் முதல் பாகத்தில் வசனம் எழுதிய எழுத்தாளர் சுஜாதா நினைவு கூறப்படவில்லை. இதை ஒரு தவறான விஷயமாக சில சினிமா விமர்சகர்கள் முன் வைத்தார்கள். தமிழ் சினிமாவில், சுஜாதா மட்டுமல்ல... பல எழுத்தாளர்களுக்கும் இதே நிலைதான். (மணிரத்னம் இயக்கத்தில் உருவான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற சில அரிதான நிகழ்வுகள் உண்டு.) தமிழ் சினிமாவிற்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் இடையே இருக்கும் இதுபோன்ற இடைவெளிகூட இங்கே பல நல்ல படங்கள் வெளிவராமல் போவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.

எழுத்தாளர்களிடம் சென்று கதை கேட்பதை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் ஒரு ஈகோ பிரச்னையாகப் பார்க்கிறார்களோ என்றுகூட தோன்றுகிறது.

ஆனால், நமது அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் மலையாள சினிமா உலகில் நிலைமை தலைகீழ். அங்கே எழுத்தாளர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இங்கே கால்ஷீட்டுக்காக சினிமா நட்சத்திரங்கள் வீட்டு வாசலில் தவம் கிடக்கும் டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் போல கேரளாவில் எழுத்தாளர்களிடம் நல்ல கதையை பெற சேட்டன்கள் காத்து கிடக்கிறார்கள்.

ப்ளசி இயக்கத்தில், ப்ரித்திவிராஜ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் முதலில் நாவலாக மலையாளத்தில் எழுதப்பட்டதுதான். தகழி சிவசங்கரன் பிள்ளை, வைக்கம் முகமது பஷீர், எம். டி வாசுதேவன் நாயர் என பல எழுத்தாளர்களின் எழுத்துகளின் வழியே மலையாள சினிமா உயிர்ப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

சம கால எழுத்தாளர்களில் எம்.டி.வாசுதேவன் நாயர் மிக முக்கியமானவர். நாயரின் பல கதைகள் மலையாளத்தில் திரைப்படங்களாக உருவாகி உள்ளன. 54 படங்கள் வரை திரைக்கதை எழுதி உள்ளார். 1989ஆம் ஆண்டு வெளியாகி மம்முட்டிக்கு திருப்புமுனையாக அமைந்த 'வடக்கன் வீர கதா' நாயரின் திரைக்கதையில் உருவானதுதான்.

இவர் ஒன்பது படங்களையும் இயக்கி உள்ளார். பத்மபூஷன், சாஹித்ய விருதுகளைப் பெற்றவர். இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ஞான பீட விருது நாயருக்கு இந்திய அரசு வழங்கி சிறப்பித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
சர்தார் 2 ஷூட்டிங்கில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு! எப்படி?
Malayalam cinema

தற்போது எம்.டி.வாசுதேவன் நாயரின் எழுத்துகள் ஓடிடி தளத்திலும் வர உள்ளன.

கதைகளில் உருவான 'மனோரதங்கள்' என்ற தொடர் ஜீ 5 தளத்தில் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

பிரியதர்ஷன் உடப்பட பல முன்னணி இயக்குநர்கள் இணைந்து இந்தத் தொடரை இயக்குகிறார்கள். வெவ்வேறு கதைகளில் ஒன்பது அத்தியாயங்களைக் கொண்டது இந்தத் தொடர். மம்முட்டி, மோகன் லால், பகத் பாசில் உட்பட ஒரு மாபெரும் நட்சத்திரக் கூட்டமே இந்தத் தொடரில் நடிக்கிறார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான மனோரதங்களின் ட்ரைலர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த ட்ரைலருக்கு மலையாளத்திலேயே வாய்ஸ் தந்துள்ளார் கமல். ட்ரைலரில் எம்.டி. வாசுதேவன் நாயரின் பங்களிப்பை பற்றியும், இந்த மனோரதங்கள் பற்றியும் சொல்கிறார் கமல். ஆரம்பக்காலங்களில் தனது திறமையை வெளிக்கொணர்ந்தது மலையாளப் படங்கள் என பல இடங்களில் சொல்லி இருக்கிறார். இதற்கு நன்றிக்கடனாக இந்த 'குரல்' தந்திருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.

ஒரு நல்ல எழுத்தாளரின் படைப்பில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற உணர்வில் பெரிய ஹீரோக்கள் அங்கே ஒன்றுசேர்ந்து உள்ளார்கள். நம் தமிழ் சினிமாவில் ஒரு நல்ல படைப்புக்காக பெரிய ஹீரோக்கள் ஒன்றுசேர்வது இன்றுவரை அதுவும் சமீப காலங்களில் நடக்காத காரியம்.

இங்கே ஹீரோவுக்கு பிடித்த கதை, ஹீரோவுக்கு பிடித்த காட்சிகள் என கதைக்காக திரைப்படம் என்று இல்லாமல் ஹீரோவுக்காக கதையை உருவாக்குகிறார்கள். இப்படி உருவாகும் பல படங்கள் வெற்றி பெறுவதும் இல்லை. பல தியேட்டர்களில் வார இறுதி நாட்களில்கூடப் பார்வையாளர்கள் வருகை குறைவாக உள்ளது.

இந்தச் சூழ்நிலை மாற, மலையாளப் படங்களைப் போல கதைக்காக படங்கள் உருவாகும் நிலை வர வேண்டும். அந்த நாளும் வந்திடாதோ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com