சுதீர் பாபுவின் 'ஹரோம் ஹரா'

ஹரோம் ஹரா
ஹரோம் ஹரா

'நைட்ரோ ஸ்டார் சுதீர் பாபு நடிக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகும் அக்டோபர் 31ஆம் தேதி மாஸான செய்தி ஒன்று இருக்கிறது' என அறிவித்திருந்தனர் படக் குழுவினர். அந்த வகையில், சுதீர் பாபு - ஞானசாகர் துவாரகா- சுமந்த் ஜி நாயுடு ஆகியோர் கூட்டணியில் உருவாகும் அந்தப் புதிய படத்துக்கு, ' ஹரோம் ஹரா' என பெயரிடப்பட்டு, அதற்கான பிரத்யேக காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தக் காணொளியில், சித்தூர் மாவட்டம் குப்பத்தில் 1989ஆம் ஆண்டில் நடக்கும் கதை இது என்பதும், அங்கு சுப்பிரமணிய சுவாமி ஆலயம், ஜகதாம்பா டாக்கீஸ் எனும் திரையரங்கம், குப்பம் ரயில் நிலையம் ...போன்ற இடங்கள் இருப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை பார்த்திராத புதிய தோற்றத்தில் சுதீர் பாபு தோன்றுவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒரு கையில் வேலும், மற்றொரு கையில் துப்பாக்கியும் வைத்துக் கொண்டு, மாஸான லுக்கில், ஆக் ஷன் அவதாரத்தில் சுதீர் பாபு நின்றிருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அத்துடன் 'இங்க பேச்சே இல்ல. செயல்தான்...' என சுதீர் பாபு தெலுங்கில் பேசும் வசனங்களும், தலைப்புடன் 'தி ரிவோல்ட்' என்ற வாசகமும் இடம்பெற்றிருப்பதால், இந்தக் காணொளி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

'செஹரி' படத்தை இயக்கிய ஞானசாகர் துவாரகா இந்தப் படத்தை இயக்குகிறார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு சைத்தன் பரத்வாஜ் இசையமைக்கிறார். 1989 காலகட்டத்திய பீரியட் ஆக் ஷன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தத் திரைப்படத்தை, ‘ஸ்ரீ சுப்ரமணியேஸ்வரா சினிமாஸ்’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com