
பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பின்னணி பாடகி கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவருடைய வீட்டின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் வீட்டின் கதவுகளை உடைத்து கல்பனா அறைக்கு சென்றனர். அங்கே அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மயங்கிய நிலையிலேயே கல்பனா வீல் சேரில் மருத்துவமனை சென்ற புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தற்போது கல்பான வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை விழுங்கி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர். தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட கல்பனா, தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த போது கல்பனாவின் கணவர் சென்னையில் இருந்ததாக தெரிகிறது. ஆனாலும் சந்தேகத்தின் பேரில் போலீசார், கல்பனாவின் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் இந்த கல்பனா?
சிறு வயதில் இருந்தே பாடி வரும் கல்பனா இதுவரை பல்வேறு மொழிகளில் 1,500 பாடல்கள் பாடியிருக்கிறார். கமல் ஹாசன் நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் படத்தில் கவுரவத் தோற்றத்திலும் வந்திருக்கிறார். இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களின் இசையில் பாடியிருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஸ்டார் சிங்கர் மலையாளம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றவர் கல்பனா. ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டார். அதன் பிறகு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இவரின் இந்த தற்கொலை முயற்சி சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)