தென்னிந்தியாவுக்கான இலங்கை வெளியுறவுத் துறை உயர் அதிகாரி டாக்டர் வெங்கடேஸ்வரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சமீபத்தில் சந்தித்து, இலங்கைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
இலங்கை வெளியுறவுத் துறை உயர் அதிகாரி டாக்டர் வெங்கடேஸ்வரன் ரஜினிகாந்துடன் நடத்திய சந்திப்பின்போது, இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவும்படி கேட்டுக்கொண்டிருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.
இதுதொடர்பாக செய்தி வெளியீட்டுள்ள இலங்கை வெளியுறவுத் துறை, இலங்கையில் தொடரும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ, இலங்கை அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறை வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களான சிகிரியா மலை, அசோக் வடிகா, கோனேஸ்வரம் கோயில், தோட்டுபோலா கண்டா, மனவாரி கோயில், சஞ்சீவினி மலை, கண்டி, ரம்போடா போன்ற இடங்களை சுற்றுலாத்துறை முன்னிலைப்படுத்தி ராமாயண டிரைல் என்னும் புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில் இந்துக் கோயில்கள் மட்டுமல்லாது பௌத்த கோயில்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்நிலையில் ராமாயணா டிரையல் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க உதவுமாறு, இலங்கை வெளியுறவுத் துறை உயர் அதிகாரி டாக்டர் வெங்கடேஸ்வரன் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் சூப்பர்ஸ்டராக உள்ள ரஜினியின் இலங்கை வருகை, தங்கள் நாட்டில் உள்ள சினிமா, சுற்றுலா, ஆன்மீகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்த உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கை அரசின் அழைப்பை ஏற்று ரஜினி அந்நாட்டுக்கு செல்வாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதேபோல், இலங்கை சுற்றுலாவின் இந்திய தூதராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.