"இவரிடம் பேசுவது ஒரு புத்தகத்தை படிப்பதற்கு சமம்" சத்யராஜ் ஓபன் டாக்!

Sathyaraj
Sathyaraj
Published on

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக இருந்து, கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியவர் சத்யராஜ். சினிமாவில் இவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமே மணிவண்ணன்தான். மணிவண்ணன் இயக்கிய பல படங்களில் சத்யராஜ் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் சத்யராஜ், ஒரு நல்ல புத்தகத்திற்கு இணையான தமிழ் சினிமா ஆளுமையைப் பற்றி சமீபத்தில் புகழ்ந்துள்ளார். யார் அந்த ஆளுமை? வாங்க தெரிந்து கொள்ளலாம்.

நடிகராகவும், வில்லனாகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் சத்யராஜ். வயதான பிறகும் சில நடிகர்கள் ஹீரோ ரோலில் மட்டுமே நடிப்பேன் என்றுள்ளனர். ஆனால் தனக்கேற்ற கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் நடித்து கைத்தட்டல் வாங்கக் கூடியவர் சத்யராஜ். அதிலும் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார். என்றென்றும் கட்டப்பா பாத்திரம் சத்யராஜின் புகழை உயர்த்தும் என்பதில் ஐயமில்லை.

இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் சத்யராஜின் கல்லூரி நண்பர் ஆவார். கல்லூரி வாழ்க்கையைத் தொடர்ந்து, சினிமாவிலும் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர். வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜை கதாநாயகனாக நடிக்க வைத்ததும் மணிவண்ணன் தான். பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மணிவண்ணன் இயக்கத்தில் மட்டும் சத்யராஜ் கிட்டத்தட்ட 25 படங்களில் நடித்துள்ளார். இதில் பலவும் வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை, ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம் மற்றும் புது மனிதன் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தன. கடந்த 2013 இல் மாரடைப்பால் இறந்த மணிவண்ணனைப் பற்றி அவ்வப்போது சத்யராஜ் நினைவு கூர்வதுண்டு. அவ்வகையில் சமீபத்தில் மணிவண்ணன் ஒரு திறந்த புத்தகம் என பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சினிமாவில் வெற்றிகரமான நடிகர்களில் மணிவண்ணனும் ஒருவர். நடிகர், வில்லன், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர். இவருடன் தொடர்ந்து 5 நிமிடங்கள் பேசினால், அது ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பதற்கு சமமாகும். அவ்வளவு பெரிய புத்திசாலி இவர். ஒரு இயக்குநராகவும், நெருங்கிய நண்பராகவும் நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்” என சத்யராஜ் கூறினார்.

Director Manivannan
Director Manivannan

1978 இல் வெளியான கிழக்கே போகும் இரயில் என்ற திரைப்படத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் மணிவண்ணன். அப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தொடர்ந்து பல வாசகர் கடிதங்களை எழுதினார். பாரதிராஜாவுக்கு மட்டுமே 100-க்கும் மேலான கடிதங்களை எழுதி அனுப்பினார். இதனால் மணிவண்ணனை தனது உதவியாளராக ஏற்றுக் கொண்டார் பாரதிராஜா.

அதன்பின் பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு கதை, வசனம் எழுதத் தொடங்கி, வெறும் இரண்டே ஆண்டுகளில் திரைப்படக் கலையைக் கற்றுக் கொண்டார். 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார். இயக்குநர் என்பதைக் காட்டிலும், நடிகராக தான் இவருக்கு பேரும், புகழும் கிடைத்தன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com