வெண்ணிற ஆடை மூர்த்தி - நகைச்சுவையின் முடிவில்லா பயணம்!             

Vennira aadai murthy
Vennira aadai murthy

வ்வொரு காலகட்டத்திலும் சில நகைச்சுவை நடிகர்கள் மக்களிடையே பிரபலமாக இருப்பார்கள்.  அதன் பிறகு அடுத்த தலைமுறை நகைச்சுவை கலைஞர்கள் பிரபலமாவார்கள். ஒரு சில நகைச்சுவை கலைஞர்கள் மட்டும் தலைமுறைகள் தாண்டி மக்களிடையே பேசப் படுபவர்களாக இருப்பார்கள். இப்படி 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவைக்காக ரசிகர்களால் ரசிக்கப்படும் நகைச்சுவை நடிகராக இருப்பவர் வெண்ணிற ஆடை மூர்த்தி.

1936 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் பிறந்த இவர் சட்டம் படித்தவர்.1965 ஆண்டு வெண்ணிற ஆடை என்ற படத்தில் ஸ்ரீதர் இவரை அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து இன்று வரை வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரிலே அழைக்கப்படுகிறார். உருண்டை  முகத்தில் சில சேட்டை பாவங்களுடன் மாறுபட்ட சப்தங்கள் தந்து நம்மை சிரிக்க வைப்பவர். ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னணி நடிகர்கள் படத்தில் இணைந்து தனக்கான ஒரு அடையாளத்தையும் தந்து விடுவார்.

Vennira aadai murthy
Vennira aadai murthy

1970 களில் நாகேஷ்,தேங்காய் ஸ்ரீனிவாசன், 1980 மற்றும் 1990 களில் கவுண்டமணி, செந்தில் அதன் பிறகு விவேக் வடிவேலு இப்படி அனைத்து முன்னணி  நகைச்சுவை நடிகர்கள் படங்களில் நடித்து தன் நடிப்பையும் பேச வைத்து விடுவார் மூர்த்தி. ஆச்சி மனோரமாவுடன் பல படங்கள் இணைந்து நடித்துள்ளார் காசேதான் கடவுளடா, அழியாத கோலங்கள், ரிக்ஷா மாமா, நடிகன், திருப்பதி ஏழுமலை வெங்கடேஷா இப்படி பல படங்களில் இவரது நடிப்பும் நகைசுவையும் தனித்துவமாக இருக்கும் நடிகன் படத்தில் ஆங்கிலத்தை தவறாக உச்சரித்து மூர்த்தி அவர்கள் செய்யும் நகைச்சுவை படம் வெளியாகி  பல ஆண்டுகள் தாண்டியும் இன்றும் ரசிக்கப்படுகிறது.

90 களுக்கு பின்பு வந்த பல படங்களில் மூர்த்தி இரட்டை அர்த்த நகைச்சுவைக்கு தாவி விட்டார் என்றே சொல்லலாம்.1995 க்கு பின் இவர் செய்த நகைச்சுவை பெரும்பாலும் இரட்டை அர்த்தம் கொண்டதாகவே இருந்தது. 90ஸ் கிட்ஸ்ஸுக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்றால் இரட்டை அர்த்த நகைச்சுவை நடிகர் என்றே நினைவுக்கு வருகிறது. சன் டிவியில் மீண்டும் மீண்டும் சிரிப்பு என்ற பெயரில் மூர்த்தி அவர்கள் வழங்கிய நகைச்சுவை தொடர் இன்றளவும் மக்கள் மத்தியில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக உள்ளது.     

மூர்த்தி அவர்கள் நடிப்பதோடு மட்டுமில்லாமல் கமல் நடித்த மாலை சூடவா படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார். சித்ராலயா என்ற சினிமா இதழுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். நடிகை மணிமாலா என்பவரை காதலித்து திருமணம் கொண்டார்.சில ஆண்டுகள் முன்பு  வரை நடித்து வந்தவர் தற்சமயம் வயது மூப்பின் காரணமாக நடிப்பில் இருந்து விலகி ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறார்.

எம் ஜி. ஆர். சிவாஜி தொடங்கி விஜய் அஜித் காலம் வரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவருக்கு தமிழ் சினிமாவும், தமிழ் நாடு அரசும் உரிய மரியாதை அளித்து கெளரவிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com