எம்ஜிஆர்– சிவாஜி - ஜெமினி தீபாவளி வெற்றிப் படங்கள்!

MGR, SIVAJI AND GEMINI
MGR, SIVAJI AND GEMINI

மிழ்த் திரையுலக நடிகர்களில் முடிசூடா மூவேந்தர்களாகத் திகழ்ந்தவர்கள் எம்ஜிஆர் – சிவாஜி- ஜெமினி ஆகியோர். இவர்களின் பல படங்கள் ஆண்டின் பல நாட்களில் வெளியாகியிருந்தாலும், தீபாவளியன்று மேற்படி நடிகர்கள் நடித்து வெளியான படங்களில் தலா இரண்டு வெற்றிப் படங்களை இப்போது ரீவைண்ட் செய்து பார்க்கலாமா?

மக்கள் கொண்டாடிய தலைவர்:

மக்கள் திலம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ’நீரும் நெருப்பும்’ திரைப்படம் 1971-ம் ஆண்டு, அக்டோபர் 18ஆம் தேதி, தீபாவளி அன்று வெளிவந்தது. படத்தை இயக்கியவர் ப.நீலகண்டன். இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்திருப்பார். கதாநாயகியாக ஜெயலலிதா நடிக்திருந்தார். அசோகன், மனோகர், டி.கே.பகவதி, தேங்காய் சீனிவாசன், மனோரமா, ஜோதிலட்சுமி, ஜி,சகுந்தலா, வி.எஸ்.ராகவன் போன்றோரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ’நீரும் நெருப்பும்’ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது எம்ஜிஆரின் வாள் சண்டைதான்.

 ’நீரும் நெருப்பும்’ படம்
’நீரும் நெருப்பும்’ படம்

’நீரும் நெருப்பும்’ படம் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகைதந்த காலகட்டத்தில் நடந்ததாகப் புனையப்பட்டிருக்கும். தந்தையைக் கொன்ற மார்த்தாண்டனைப் பழிவாங்கும் இரட்டை இளவரசர்களான மணிவண்ணன், கரிகாலன் ஆகியோரைப் பற்றிய கதை இது. இரட்டையர்கள் பிரிக்கப்பட்டு வளர்க்கபடுகின்றனர்.

ஆனால் மணிவண்ணனுக்கு ஏற்படும் அதே உணர்வால் கரிகாலனும் ஆட்படுகிறார். இரட்டையர்களில் ஒருவர் அருணகிரியாலும், மற்றொருவர் மருதுவால் வளர்க்கப்படுகின்றனர். ஒருவர் படித்தவர், மற்றவர் திறமையான போர்வீரர். மார்த்தாண்டனை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு வீழ்த்துகின்றனர்.

1844 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ர் டூமாஸ் எழுதிய, ‘தி கோர்சிகன் பிரதர்ஸ்’ என்ற ஃபிரெஞ்சு நாவலை அடிப்படையாகக் கொண்டிருந்தது இதன் கதைக் களம். இந்தியில், ‘கோரா அவுர் காலா’ என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ’நீரும் நெருப்பும்’ படத்தில் எம்ஜிஆரின் மாறுபட்ட இரு வேட நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

, ‘தி கோர்சிகன் பிரதர்ஸ் புத்தகம்
, ‘தி கோர்சிகன் பிரதர்ஸ் புத்தகம்

’நீரும் நெருப்பும்’ படப்பிடிப்புக்கு வந்த இந்தி நடிகர் தர்மேந்திரா, “நிஜ வாள் கொண்டு எப்படிச் சண்டையிடுகிறீர்கள்?” எனக் கேட்டு, எம்.ஜி.ஆரிடம் தனது வியப்பைத் தெரிவித்து சென்றது அக்காலகட்டத்தில் பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியானது.

அதேபோல், 1964ம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, தீபாவளியன்று எம்ஜிஆர் நடித்த ‘படகோட்டி’ வெளியானது. மீனவர் வேடம் ஏற்று எம்ஜிஆர் நடித்திருப்பார். ஈஸ்ட்மென் கலரில் உருவான இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். எல்லாப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்!

சக்தி டி. கிருஷ்ணசாமி கதை எழுதிய இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராஜ் இயக்கினார். சரோஜாதேவி கதாநாயகியாக நடித்திருந்தார். மனோரமா, நாகேஷ் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். அசோகன், ராம்தாஸ் ஆகியோரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். படகோட்டி படத்தில் சுறா மற்றும் திருக்கை என்னும் இரண்டு மீனவக் குழுக்களைப் பற்றிய கதை இது. ஜமீந்தார் வேடமேற்ற எம்.என்.நம்பியார், தம்முடைய சூழ்ச்சியின் மூலமாகப் பிரித்தாளும் கொள்கையை மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்துவார்.

படகோட்டி படம்
படகோட்டி படம் upload.wikimedia.org

சுத்ததன்யாசி ராகத்தில் அமைந்திருந்த ‘தொட்டால் பூ மலரும்’ பாடல் ரசிகர்களைப் பலநாட்கள் முணுமுணுக்க வைத்தது. 2004ஆம் ஆண்டு, ஏ.ஆர். ரகுமான், ‘நியூ’ திரைப்படத்தில் இதை ரீமேக் செய்தது நினைவிருக்கும். அதேபோல், டி.எம்.எஸ் பாடிய, ‘தரை மேல் பிறக்க வைத்தான்’, ‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்’, ‘கல்யாணப் பொண்ணு’ ’நான் ஒரு குழந்தை’ பாடல்கள் இன்றளவும் இசைக் குழுக்களால் பாடப்பட்டு வருகின்றன. பி.சுசீலாவுடன் இணைந்து டி.எம்.எஸ் பாடிய, ‘பாட்டுக்குப் பாட்டெடுத்து’ பாடல் உணர்வுபூர்வமானது.

கவிஞர் கண்ணதாசனுடன் எம்ஜிஆருக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தபோது, அந்த இடைவெளியில் வாலிக்கு இந்தப் படத்தில் பாட்டெழுதும் வாய்ப்புக் கிடைத்தது. வாலி என்ற பாடலாசிரியரைப் படவுலகுக்கு அறிமுகம் செய்துவைத்தது படகோட்டிதான்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்:

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு இலக்கணம் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான். அவர் நடிப்பில் 1952 ஆம் ஆண்டிலிருந்து 1993வரை 41 திரைப்படங்கள் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் 8 முறை இரண்டு திரைப்படங்களாக சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியாகி சாதனை படைத்துள்ளன. 22 திரைப்படங்கள் 100 நாட்களை கடந்தும், 5 திரைப்படங்கள் 175 நாட்களை கடந்தும், 3 திரைப்படங்கள் 200 நாட்களைக் கடந்து ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப்படைத்துள்ளன.

நாடக கலைஞராக இருந்த கணேசன் வெள்ளித்திரையில் முதல் முறையாக தோன்றியது 1952ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான ’பராசக்தி’ படத்தின் மூலமாகதான். தீபாவளி அன்று வெளியான ’பராசக்தி’ தமிழ்நாடு முழுவதும் 175 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் ரீதியாகவும், கருத்து ரீதியாகவும் மகத்தான வெற்றிப்பெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வசனத்தில் ’பராசக்தி’ படத்தில் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இன்றளவு பிரபலம்.

பராசக்தி படம்
பராசக்தி படம்

இப்படத்தை கிருஷ்ணன் – பஞ்சு இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருந்தனர். ஆர்.சுதர்ஸனம் இசையமைத்திருக்கிறார். 1950ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆர்.சுதர்ஸனம் இசையமைத்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் மொத்தம் 2 ஆண்டுகள் நடைபெற்றது. படப்பிடிப்பின்போது நடைபெற்ற சில சர்ச்சைகளால் படம் எடுத்து முடிக்க காலதாமதம் ஆனது. சிவாஜி கணேசனுக்கு மட்டுமல்லாது பண்டரிபாய், எஸ்.எஸ்.ராஜேந்திரன், எஸ்.வி.சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி போன்றோரும் சிவாஜியுடன் நடித்திருந்தனர். எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கும் இதுவே முதல் தமிழ்ப் படமாகும்.

இதே பெயரிலான பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். ’பராசக்தி’ படம் இரண்டாம் உலகப் போரின்போது ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த அவலங்களை விவரிக்கிறது. தாயை இழந்து, தந்தையுடன் மதுரையில் வாழ்ந்து வரும் கல்யாணிக்கு மூன்று அண்ணன்கள். அவர்கள் அனைவரும் பர்மாவில் வியாபாரம் செய்து வந்தனர். 1940களில் மூண்ட உலகப் போர் சூழலில் தங்கைக்கு கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது. போரினால், கதையின் நாயகனான கல்யாணியின் கடைசி அண்ணன் குணசேகரனுக்கு மட்டும் கப்பலில் பயணச்சீட்டு கிடைக்கப்பெற்று, அன்றைய மதராசான சென்னைக்கு வருகிறான்.

சென்னையில் தான் கொண்டு வந்த அனைத்தும் ஒரு வஞ்சகியின் சூழ்ச்சியினால் இழந்து, மதுரைக்கும் செல்ல வழியின்றி, பசியினால் சமூக அவலங்களைச் சந்திக்கிறான். இவ்வேளையில் கல்யாணம் நிறைவுற்று, பின் மகிழ்வாய் குழந்தை பெற்ற அன்றே விபத்தால் கணவனும், பாலகன் பிறந்த நன்நிகழ்வைக் கூற வந்தபோது விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, கடன் பொருட்டு வீடும் இழந்து, கைம்பெண்கள் சந்தித்தத் துயரத்தை கல்யாணி எதிர்கொள்கிறாள்.

பராசக்தி படம்
பராசக்தி படம்Sri Sritharan

பின் என்ன நிகழ்கிறது என்பது மீதி கதை. மூடநம்பிக்கை, பெண் அடிமைத்தனம் மற்றும் பகுத்தறிவு ஆகியவற்றை பாமர மக்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட ’பராசக்தி’ படம் தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றிய படமாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் தீபாவளிக்கு 41 திரைப்படங்களில் வெளிவந்திருந்தாலும், இன்றைளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்த படம் என்றால் அது ’நவராத்திரி’ திரைப்படம்தான்.

1964ஆம் ஆண்டு தீபாவளியின்போது வெளிவந்தது சிவாஜியின் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய படம் என்றால் அது ‘நவராத்திரி’ படம்தான். சிவாஜியின் 100ஆவது படமான ‘நவராத்திரி’ நடிகையர் திலகம் என்றழைக்கப்படும் சாவித்திரி ஜோடியாக நடித்திருப்பார். ‘நவராத்திரி’ படம் சாவித்திரியை மையமாகவைத்து எடுக்கப்பட்ட படம் என்றாலும் அவரைச் சுற்றி வரும் ஒன்பது வெவ்வேறு பாத்திரங்களில் சிவாஜி கணேசன் தனது அசாத்தியா நடிப்பால் அசத்தியிருப்பார். சூரியன் சாவித்திரி என்றால் அதைச் சுற்றும் ஒன்பது கிரகங்களாக ஒரே சிவாஜியைச் சொல்லலாம்.

அதிசயம், பயம், இரக்கம், கோபம் , சாந்தம், அருவருப்பு, சிங்காரம், வீரம், மற்றும் ஆனந்தம் ஆகிய ஒன்பது உணர்வுகளையும் ஒன்பது வெவ்வேறு பாத்திரங்களில் பிழிந்தெடுத்து அசத்தியிருப்பார் சிவாஜி. இளைஞன், பணக்காரர், ரவுடி, தொழுநோயால் பாதிப்படைந்தவர், மருத்துவர், கூத்துக்கட்டுபவர்,போலீஸ்காரர், கிராமத்து விவசாயி என ஒவ்வொரு விதமான பாத்திரத்தையும், பாத்திரமாகவே மாறி நடிப்பில் அதகளப்படுத்தியிருப்பார் சிவாஜி.

சாவித்திரி ஒன்பது இரவுகளில் , மேற்படி ஒன்பது உணர்ச்சிகளை வெளிப்படும் சிவாஜியுடன் நடிப்பதாகக் கதை அமைந்திருக்கும். நாகேஷ், மனோரமா, குட்டி பத்மினி ஆகியோரும் நடித்திருப்பார்கள். சிவாஜியைப் போல இன்னொரு நடிகர் இப்படி நடிக்கவே முடியாது எனபதை அழுத்தமாகச் சொன்ன தீபாவளி வெற்றிப் படம்தான் நவராத்திரி.

ஒரு காட்சியில், மேடையில் சிவாஜியும் சாவித்திரியும் ‘அதாகப்பட்டது...’ என்று ஆரம்பித்து ‘தங்கச் சரிகைச் சேலை’ என்று அருமையாகப் பாடி ஆடி நடித்திருப்பார்கள். தியேட்டரில் கரவொலி அடங்க நெடு நேரமான காட்சிகளில் இதுவும் ஒன்று.

நவராத்திர படம்
நவராத்திர படம்

ஏ.பி நாகராஜன் இயக்கியிருந்த இப்படத்தில் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் நடித்திருந்தார். அவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 1964ம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் படிகோட்டி படமும், சிவாஜி நடிப்பில் நவராத்தியும் ஒரே நேரத்தில் தீபாவளி அன்று வெளியாகி இருந்தது. இரண்டு படங்களும் சூப்பர்ஹிட்டானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பாட்டுக்குப் படகோடி, நடிப்புக்கு நவராத்திரி’ என்று பேசிக்கொண்டார்கள்.

நவராத்திரி திரைப்படம் 100 நாட்களைத் தாண்டி திரையரங்குகளில் ஓடிச் சாதனை படைத்தது. கண்ணதாசன் பாடல்களுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருப்பார். தமிழில் சூப்பர்ஹிட்டான நவராத்திர படம் அதன்பிறகு 1966ஆம் ஆண்டு தெலுங்கில் நவராத்திரி என்றும், 1974ஆம் ஆண்டு இந்தியில் ’நயா தின் நை ராத்’ என்றும் ரீமேக் செய்யப்பட்டது.

காதல் மன்னன் ஜெமினி:

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி என இரு ஜாம்பவான்கள் இருந்தாலும் அதேகாலத்தில் தனக்கென தனியொரு இடத்தை பிடித்த நடிகர் என்றால் இது காதல் மன்னன் ஜெமினி கணேசன்தான்.

ராமசாமி கணேசன் எனும் இயர் பெயர் கொண்டவர் பின்னாளில் தான் வேலை பார்த்த ஜெமினி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரே அவரின் அடையாளமாக மாறியது. தமிழ்த் திரைப்பட உலகில் முதல் பட்டதாரி என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1971ஆம் ஆண்டு தீபாவளியன்று எம்ஜிஆர் நடித்த ‘நீரும் நெருப்பும்’, சிவாஜி நடித்த ‘பாபு’, மற்றும் ஜெய்சங்கர் நடித்த ‘வீட்டுக்கு ஒரு பிள்ளை ஆகிய மூன்று திரைப்படங்களுடன் களமிறங்கியது ஜெமினி நடித்த ‘ஆதி பராசக்தி’.

மற்ற மூன்று படங்களையும் விட அதிக வசூல்செய்து சாதனை புரிந்தது இந்தப் படம். விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரித்து, இயக்கியிருந்த இந்தப் பக்திப் படத்தில் ஜெமினி கணேசனுடன் ஜெயலலிதாவும் நடித்திருந்தார். கதாநாயகர்களைவிடக் கதையம்சத்துக்கு ரசிகர்கள் ஆதரவளிப்பார்கள் என்பதற்குச் சான்றானது இந்தப் படம்.

ஆதிபராசக்தி படம்
ஆதிபராசக்தி படம்

ஆதி பராசக்தியின் அருள் நிரம்பிய சக்திகளையும், அவர் நடத்திய திருவிளையாடல்களையும் தனக்கே உரிய பாணியில் படமாக்கியிருந்தார் இயக்குநர். ஜெமினியின் அற்புதமான நடிப்பாற்றல் வெளிபட்ட படங்களில் முக்கியமானது வெற்றிப்படமான ‘ஆதி பராசக்தி!அதுவரை சமூகப் படங்களையே இயக்கிவந்த கே.எஸ்.கோபாலகிருச்ணன் முதல் முறையாக எடுத்த பக்திப் படம் இதுதான்!

‘ஆத்தாடி மாரியம்மா’ என்ற சீர்காழி கோவிந்தராஜனின் பாடல் இன்றும் பல அம்மன் கோவில் திருவிழாக்கலில் எதிரொலிக்கும். அதேபோலத்தான் டி.எம்.சௌந்தர்ராஜன் பாடிய ‘சொல்லடி அபிராமி’ பாடலும்! படத்துக்கு இசையமைத்திருந்தவர் கே.வி.மஹாதேவன்.

அதேபோல், ஜெமினி கணேசன் நடிப்பில் தீபாவளி அன்று வெளியான மற்றொரு முக்கியமான படம் என்றால் இது 1972ஆம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளியான ’தெய்வம்’ திரைப்படம்தான். ‘தெய்வம்’ திரைப்படத்தை எம். ஏ. திருமுகம் இயக்கியிருந்தார். கிருபானந்த வாரியாரும் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, ஏவிஎம்.ராஜன், மேஜர் சுந்தரராஜன், அசோகன், ராமதாஸ், தேங்காய் சீனிவாசன், முத்துராமன், ஸ்ரீகாந்த், நாகேஷ், செந்தாமரை எனப் பலரும் நடித்திருந்தனர்.

முருகனின் திருவிளையாடல்களைப் பேசியது ’தெய்வம்’ படம். தனித் தனியான பிரச்னைகளுக்கு முருகன் அருளால் தீர்வு கிடைப்பதைப் போலக் கதை அமைக்கப்பட்டிருந்தது. ஜெமினி கணேசன் ஆறுமுகமாகவும், கே.ஆர்.விஜயா வள்ளியம்மையாகவும் நடித்து அசத்தினார்கள். சிவகுமார் சுப்பிரமணியமாகவும், ஜெயா தெய்வானையாகவும் நடித்து இருந்தனர்.

தெய்வம் படம்
தெய்வம் படம் www.xappie.com

இந்தப் படங்களின் தித்திக்கும் பாடல்களுக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியனாதன். அவரின் இசையில் வெளியான மதுரை சோமு பாடிய ‘மருதமலை மாமணியே’ பாடலையும், பித்துகுளி முருகதாஸ் பாடிய ‘நாடறியும் நூறு மலை; நான் அறிவேன் சுவாமிமலை’ பாடலையும், டி.எம்.எஸ் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இணைந்து பாடிய ‘திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்’ பாடலையும்

பெங்களூர் ரமணியம்மாள் பாடிய, ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ பாடலையும் சூரமங்கலம் சகோதரிகள் பாடிய, ‘வருவாண்டி தருவாண்டி மலையாண்டி’ பாடல்களை எந்த காலத்திலும் மறக்கமுடியாது. அதேபோலதான் 70களில் வெளியான தீபாவளி வெற்றி படங்களையும் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com