மறக்க முடியாத தமிழ் சினிமா: 27 ஆண்டுகளை நிறைவுச் செய்த காதல் கோட்டை!

மறக்க முடியாத தமிழ் சினிமா: 27 ஆண்டுகளை நிறைவுச் செய்த காதல் கோட்டை!
Published on

சினிமா என்ற சக்தி வாய்ந்த ஊடகம் வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டும் நமது நாட்டில் பார்க்கப்படுவதில்லை. நமது அன்றாட பிரச்சனைகளுக்கு ஒரு வடிகாலாக, மன காயங்களுக்கு ஒரு மருந்தாக்கவும் பார்க்கப்படுகிறது அன்பு, கடமை, தாய்மை, காதல் இப்படிப் பல உணர்வுகளை நமக்கு சினிமா கடத்தி உள்ளது.

சில படங்கள் காலம் தாண்டியும் மக்களால் மறக்க முடியாத படைப்பாகக் கொண்டாடப் படுகிறது. காதல் என்ற ஒரு விஷயம் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமாக சொல்லப்பட்டிருக்கிறது.

பார்த்துக் கொண்டே காதல், பார்க்காமல் காதல், பேருந்தில் காதல், ரயிலில் காதல், ஜாதி மதம் தாண்டிய காதல் இப்படி பல காதல்களை சொல்லியிருக்கிறரார்கள் நமது இயக்குநர்கள். சாதிய படிநிலைகள், சமூக ஏற்ற தாழ்வுகள் கொண்ட நம் சமூகத்தில் காதல் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படாத விஷயமாகத்தான் உள்ளது. நடைமுறை வாழ்க்கையில் இயல்பாக இல்லாத காதலைத் திரையில் தேடி மகிழ்கிறான் பாமர ரசிகன். பல புதுமையான காதல் அம்சங்களை உள்ளடக்கி தமிழ் சினிமாவில் வெற்றிப் படமாக கடந்த 27ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வெளிவந்த வெற்றி பெற்ற படம்தான் காதல் கோட்டை.

1996 ம் ஆண்டு இதே ஜூலை 12 ம் தேதி வெளியானது காதல் கோட்டை. ஊட்டியில் உள்ள கமலியும், சென்னையில் உள்ள சூர்யாவும் பார்க்காமலேயே காதலிப்பார்கள். இடையில் கடித போக்குவரத்து மட்டுமே இருக்கும். இப்படத்தின் இயக்குநர் அகத்தியன் இந்த கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியும் இப்படத்தைத் தயாரிக்க முன் வரவில்லை. இந்த படத்தில் லாஜிக் இல்லை என்று பல தயாரிப்பாளர்கள் மறுத்துவிட்டனர். அகத்தியனின் முந்தையை படமான வான்மதி படத்தைத் தயாரித்த சிவசக்தி பாண்டியனே இப்படத்தை தயாரிக்க முன் வந்தார்.வான்மதி படத்தின் மூலமாக அகத்தியனுக்கும் அஜித்திற்கும் நல்ல நட்பு இருந்ததால் காதல் கோட்டை படத்திலும் அஜித்தையே ஹீரோவாக் கினார் அகத்தியன். முகம் பார்க்காத கடித காதலை ஒரு பரபரப்பான திரைக்கதையில் தந்திருப்பார்.

படத்தில் அஜித்தை விட ஒரு படி மேலே நன்றாக நடித்திருப்பார் தேவயானி.இப்படம் வெளியான பின்பு தேவியானியை தன் வீட்டு பெண்ணாக, காதலியாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதன் விளைவாக இந்த படத்திற்குப் பின் வெளியான தேவயானி கிளாமராக நடித்த சில படங்கள் வெற்றி பெற வில்லை. தேவயானியும் கிளாமரை கைவிட்டு ஹோம்லியான பாதையை தேர்ந்தெடுத்தார். படத்தில் மிக சிறந்த கிளைமாக்ஸ் இப்படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. தமிழில் பட்டம் பெற்ற அகத்தியன் பார்க்காமல் காதல் என்ற கருவை இலக்கியத்திலிருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டார். இவர் இலக்கியம் என்று சொன்னாலும் இது எங்கள் கதை என்றார்கள் சிலர். இந்த பிரச்சனைகளையும் தாண்டி மக்களிடையே மறக்க முடியாத படமாக உள்ளது காதல் கோட்டை.

தலைவாசல் விஜய் மற்றும் கரண் கதாபாத்திர அமைப்பும் மிக யதார்த்தமாக இருக்கும். இப்படத்திற்காகச் சிறந்த இயக்குநர் மற்றும் திரைக்கதைக்கான விருது அகத்தியனுக்குக் கிடைத்தது. சிறந்த காதல் திரைப்படங்கள் வரிசையில் காதல் கோட்டைக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. இந்த திரைப்படம் வெளியான பின்பு இப்பட பாதிப்பால் காதல் என்ற பெயரில் பல படங்கள் வெளியாகின. இப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் ரீ மேக் செய்யப்பட்டது. காதலை புதிய பார்வையில் சொன்ன காதல் கோட்டை வெளியான நாள் இன்று.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com