கடந்த 2021ல் எத்தனையோ சிறந்த தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்தும் அவற்றிற்கு தேசிய விருது வழங்கப்படாததற்கு அரசியல் காரணமாக இருக்குமா என இணையத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நேற்று மாலை 2021ம் ஆண்டு வெளியான இந்தியத் திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமா அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் சூர்யா நடித்த ஜெய் பீம், ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை, தனுஷ் நடித்த கர்ணன் மற்றும் சிம்பு நடித்த மாநாடு ஆகிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தும் அவற்றுக்கு விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற இந்தத் திரைப்படங்களுக்கு தேசிய விருது எதுவும் கிடைக்காதது தமிழ் சினிமா ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. மற்ற இந்திய மொழிகளில் வெளிவந்த திரைப்படங்களைக் காட்டிலும் இந்தத் திரைப்படங்கள் மக்களிடம் அதிக பாராட்டுகளை பெற்றபோதும், அவை தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படாததற்கு அரசியல்தான் காரணமாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக, சூர்யா, மணிகண்டன், லிஜோமோல், ஜோஸ் நடித்த ஜெய் பீம் திரைப்படம் இருளர் சமூக மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இந்த சமூகத்துக்கு வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி நீதியைப் பெற்றுத் தந்தார் என்பது குறித்து பேசிய இந்தத் திரைப்படத்துக்கு எந்தப் பிரிவுகளின் கீழும் விருதுகள் கிடைக்கவில்லை என்பதை தமிழ் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி, கொரோனா காரணமாக OTTயில் வெளியான ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்ற சார்பட்டா பரம்பரை திரைப்படத்துக்கும் எந்த விருதுகளும் வழங்கப்படவில்லை. சிறந்த ஸ்போர்ட்ஸ் டிராமா வகையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், நல்ல கதைக்களமும் அதே நேரத்தில் தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு தரமான திரைப்படமாக வெளிவந்திருந்தது. இதற்கும் விருது கிடைக்காதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.
இப்படி, கர்ணன், மாநாடு போன்ற சிறந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் கிடைக்கவில்லை. இத்திரைப்படங்கள் மற்ற மொழிகளில் வெளியான படங்களைக் காட்டிலும் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் இருந்தும், ஒரு படத்துக்குக் கூட விருது கிடைக்கவில்லை. ‘ஏதோ ஒருசில அரசியல் காரணமாகத்தான் இந்தத் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டன’ என இணையத்தில் பலரும் தங்களின் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.