நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்துக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் படம் லியோ. விஜயதசமி விடுமுறையை கருத்தில் கொண்டு இந்தப் படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஏற்கனவே இருவர் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் லியோ திரைப்படம் 19ஆம் தேதி காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும். மேலும் தொடர்ந்து அக்டோபர் 20 முதல் 24 வரை காலை 7 மணி முதல் படம் திரையிடப்படும்.
கடந்த வாரம் லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது. படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் லியோ சிறப்பு காட்சிக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல்கள் வெளியான நிலையில், லியோ இசை வெளியீடு நடைபெறாது என படக்குழு அறிவித்தது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து வெளியான ட்ரைலரில் இடம்பெற்ற ஆபாச வசனம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியது. இதற்கு முழு பொறுப்பையும் லோகேஷ் கனகராஜ் ஏற்று கொண்டார்.
இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நாளில் சிறப்பு காட்சி இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது. லியோ படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் கெளதம் மேனன், இயக்குநர் மிஷ்கின், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.