தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்த சுபாஸ்கரன்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்த சுபாஸ்கரன்!

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனம் லைகா. இதன் நிறுவனர் சுபாஸ்கரன் செப்டம்பர் மாதம் 19ம் தேதியன்று லண்டன் மாநகரில் இலங்கை அதிபர் ரணில்விக்ரமசிங்கேவை சந்தித்தார். அந்தச் சந்திப்பு பல்லாண்டுகள் சிறையில் வாடிக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் வாழ்வில் வெளிச்சத்தைக் கொடுத்துள்ளது. ஆம், அந்தச் சந்திப்பில் சுபாஸ்கரன் வைத்த கோரிக்கையை ஏற்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார் ரணில். அதனையடுத்து, முதலாவதாக எட்டு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் மேலும் ஒன்பது அரசியல் கைதிகள் விடுதலையாகி உள்ளார்கள்.

இவர்களில், முதலில் விடுதலையான எட்டு தமிழ் அரசியல் கைதிகளின் நல்வாழ்வுக்காக தலா ரூபாய் 25 லட்சத்தை வழங்கினார் சுபாஸ்கன். மீண்டும் இம்மாதம் 3ம் தேதி இரண்டாம் கட்டமாக விடுதலை செய்யப்பட்ட எட்டு அரசியல் கைதிகளுக்கு, கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா நட்சத்திர விடுதியில் வைத்து தலா ரூபாய் 25 லட்சத்தை வழங்கினார். இனிவரும் காலங்களில் விடுதலையாகும் ஒவ்வொரு அரசியல் கைதிகளுக்கும் அவர்களின் நல்வாழ்வுக்காக ரூபாய் 25 லட்சம் வழங்க உள்ளதாகவும் சுபாஸ்கரன் அவர்கள் கூறியுள்ளார். இந்த நிகழ்வால் விடுதலையான அரசியல் கைதிகள் மனம் நெகிழ்ந்து அழுது விட்டார்கள். “இப்படியெல்லாம தங்கள் வாழ்வில் நடக்கும் என்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை” என்று தெரிவித்தார்கள். இவர்களில் சிலருக்கு 200 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து மீண்டும் நவம்பர் 6ம் தேதி இலங்கை அதிபர் ரணிலை, சுபாஸ்கரன் மற்றும் பிரேம் சிவசாமி ஆகியோர் கொழும்பில் சந்தித்தனர். அப்போது மேலும் பல அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அதிபர் ரணில் ஒப்புதல் வழங்கியுள்ளார். ஒட்டு மொத்தமாக 81, அதாவது அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையாக உள்ளனர் என்கிற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் முதலீடுகள் செய்யச் சொல்லி, இங்கிலாந்தில் பெரும் தொழிலதிபராக விளங்கும் சுபாஸ்கரனை இலங்கை அரசு கேட்டுக்கொண்டது. அதனையேற்று, ‘இலங்கையில் முதலீடு செய்ய வேண்டுமென்றால், தமிழர்கள் தரப்பு சொல்வதையும் இலங்கை அரசு கேட்டாக வேண்டும் என்கிற திட்டவட்டமான கோரிக்கையை சுபாஸ்கரன் வைத்தார். இதன் மூலம் பெரும் அரசியல் காய் நகர்த்தல் ஒன்றில் சுபாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல நல்ல திட்டங்களை மேற்கொள்ள இருக்கிறார் சுபாஸ்கரன். இதனால் ஈழத் தமிழர்கள் அனைவரும் அவருக்குக் கண்ணீருடன் நன்றி தெரிவித்து வருகிறார்கள். அதன் உச்சமாக இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன், “அரசாங்கம் தமிழ் கைதிகளுக்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுத்துள்ளது. ஆனால், லைகா நிறுவனர் சுபாஸ்கரன் மிகப்பெரிய அளவில் உதவிகள் செய்துள்ளார். நம் நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழர் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் பெரும் தொழிலதிபராகத் திகழ்கிறார் என்பதில் நாம் பெருமை அடைகிறோம்” என்று பேசியுள்ளார். லைகா நிறுவனர் சுபாஸ்கரனின் செயலைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com