

ராதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான தாய்க் கிழவி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எந்த ஒரு முன்னணி நடிகரும் இல்லாமல் , இளம் கதாநாயகிகள் யாரும் இல்லாமல் , ராதிகா தவிர அதிகம் பிரபலமாகாத மற்ற நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு ₹80 கோடி வசூலை வாரி குவித்து, இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் மிகப் பெரிய லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது.
தாய்க்கிழவி திரைப்படம் எதிர்பாராத மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் தற்போது சமூக வலைதளங்களில் அதன் கிளைமாக்ஸ் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. தாய் கிழவி பவுனுத்தாயியின் மகளும் 10 வயதைக் கடந்த மகனுக்கு தாயான சுருளிக்கும், நீண்ட வருடங்களாக திருமணம் ஆகாமல் தவிக்கும் அவர்களின் உறவினரான பென்னி குக்கிற்கும் திருமணம் செய்து வைத்தது தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தாய்க்கிழவி மருத்துவனையில் உயிருக்கு போராடிய போது காப்பாற்றியது, அவளது மருமகன் சவஹர்லால் நேரு(சுருளியின் கணவன்) தான். அவன் 3 பவுன் நகைக்காக, 3 வருடம் மாமியார் வீட்டில் தான் மனைவியை விட்டுச் சென்றாலும் , ஆபரேஷனுக்காக ₹4 லட்ச ரூபாய் பணம் கொடுத்து உயிரைக் காப்பாற்றி இருக்கிறான். தான் செய்தது எல்லாம் தவறு என்று உணர்ந்து சுருளியிடம் மன்னிப்பு கேட்கிறான்.
மன்னிப்பு கேட்ட பின்னர் சுருளியையும் நேருவைவையும் சேர்த்து வைக்காமல் , அவளை பென்னி குக்கிற்கு இரண்டாவவதாக திருமணம் செய்து வைத்தது தவறு. பவுனுத்தாயிக்கு நன்றியில்லை. இந்த திரைக்கதையில் நிஜ வில்லன் யாரென்றால் பென்னி குக் தான். தன்னை நேரு அடித்ததற்கு பழி வாங்க , அவனிடமே 4 லட்ச ரூபாய் பணம் வாங்குகிறான். இறுதியில் அவனது மனைவியிடம் சேர்த்து வைக்காமல்,தானே திருமணம் செய்து கொள்கிறான் என்று ஒரு தரப்பு விமர்சனம் எழுந்துள்ளது.
மறு தரப்போ இது பிற்போக்குவாதிகளின் மோசமான மனநிலையை பிரதிபலிக்கிறது. நேரு ஒன்றும் தன் சொந்த பணத்தை வாரிக் கொடுக்கவில்லை. பவுனுத்தாயி தன் மகளுக்கு போட்ட 22 சவரன் நகையை அடகு வைத்து, அவன் வட்டிக்கு விட்டு கொழித்துள்ளான். 22 சவரன் நகையின் மதிப்பு 30 லட்சத்தை தாண்டி வரும் , அதில் 3 பவுன் நகையின் மதிப்பு தான் 4 லட்சம். வெறும் 3 பவுன் நகைக்காக கட்டிய மனைவியை 3 வருடங்களாக தாய் வீட்டிற்கு அனுப்பியவன்.
அவனும் சும்மா ஒன்றும் பணத்தை கொடுக்கவில்லை. பவுனுத்தாயிடம் இருக்கும் 160 பவுன் நகையில் பெரிய பங்கு கிடைக்கும் என்ற பேராசையில் தான் கொடுத்துள்ளான். காலம் கடந்து வரும் ஞானத்தால் ஒரு பயனும் இல்லை. மீண்டும் அவனிடம் சென்று தன் மகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தான் பவுனுத்தாயி பென்னிகுக்கிற்கு தன் மகளை துணிச்சலாக திருமணம் செய்து கொடுத்துள்ளாள். அதுவும் தன் பெயரன், மகளின் சம்மதத்தை பெற்று குடும்பத்தினர் சம்மதத்தையும் பெற்று, அனைவரின் முன்னிலையிலும் திருமணம் செய்து வைக்கிறாள்.
இது மனைவியை என்ன கொடுமை செய்தாலும் மீண்டும் தன்னுடன் சேர்த்து வைப்பார்கள் என்று ஆணவத்தில் இருக்கும் கணவர்களுக்கு பேரிடியாக இருக்கும். இதனால் , "பவுனுத்தாயி செய்தது சரி தான் , பெண்களுக்கு உரிய மதிப்பு கொடுக்காவிட்டால் இப்படி தான்" என்று இன்னொரு தரப்பு தாய்க்கிழவியின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.