இந்தியத் திரைத் துறையில் குறிப்பிடத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் கே.விஸ்வநாத். தெலுங்கு திரைப்படத் துறையில் பல படங்களை இயக்கிய இவர், தமிழ், இந்தி, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் முத்திரை பதித்து உள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்த சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற பல படங்கள் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவை ஆகும்.
இன்றைய பிரபல கதாநாயகர்களான கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, தனுஷ் போன்றோர்களுடன் இவர் இணைந்து தமிழ் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமா கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டும் விதமாக இவருக்கு 2016ம் ஆண்டு, ‘தாதா சாகெப் பால்கே விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வயது முதிர்வின் காரணமாக (94 வயது), பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே இருக்கும் கே.விஸ்வநாத் அவர்களை இன்று கமல்ஹாசன், ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவரது குடும்பத்தினர் உடன் இருந்தனர். தாம் சினிமா துறையில் மிகப் பெரிய வெற்றி பெற்றதற்குக் காரணமாக உள்ளவர்கள் என்று கமல்ஹாசன் நினைக்கும் ஒருசிலரில் கே.விஸ்வநாத் அவர்களும் ஒருவர் ஆவார். அதனால் கே.விஸ்வநாத் அவர்கள் மீது கமலுக்கு நிறைய மரியாதை உண்டு. அதனால்தான் இயக்குநர் கே.விஸ்வநாத் அவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்டு குனிந்தபடி அவரை வணங்கும் புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.