Interview: "ஸ்டார் ஹீரோக்களை இயக்குவீங்களா?" - பாண்டிராஜ் சொன்ன ஷாக் பதில்! 'தலைவன் தலைவி' பட ரகசியங்கள்!
"இப்பதான் 2009ல் பசங்க படம் வெளிவந்த மாதிரி இருக்கு, நடுவில் பதினாறு வருஷம் போனதே தெரியல. இந்த படத்தில் நடித்த சிறுவர்கள் இன்று வளர்ந்து பெரியவர்களானப் பின்பும், ஏதோ ஒரு விதத்தில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வர்றாங்க. ஒவ்வொரு வருடமும் ஸ்கூல் திறக்கும் ஜூன் மாதத்தில் 'பசங்க' படம் நினைவில் கொள்ளபடுது. "நான் பல படங்கள் பண்ண பிறகும், என் முதல் படமான பசங்க படத்துக்கு தேசிய விருது கிடைத்ததையும் இன்றளவும் 'பசங்க' பேசப்படுவதையும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் பார்க்கிறேன்" என்று பழைய நினைவுகளுடன் பேச்சை தொடங்குகிறார் டைரக்டர் பாண்டிராஜ்.
இவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் 'தலைவன் - தலைவி' திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. படத்தின் இறுதி பணிகளில் பரபரப்புடன் இருந்த பாண்டிராஜ் சற்று நேரம் ஒதுக்கி, நமது கல்கி ஆன்லைனுக்கு அளித்த பேட்டி...
யார் இந்த தலைவன் தலைவி? நீங்கள் உங்கள் கிராமத்தில் பார்த்த கிராமத்து தம்பதிகளா? அல்லது மாடர்ன் தம்பதிகளா?
இந்த படத்தில் வரும் கணவன் - மனைவி கதா பாத்திரத்தை கிராமம் நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் நம்மால் கனெக்ட் செய்து கொண்டு பார்க்க முடியும். படம் பார்க்கும் போது நம் வீட்டில் நடப்பதை போன்றோ அல்லது நமக்கு தெரிந்தவர் வீட்டில் நடந்ததை போன்ற உணர்வோ நமக்கு வரும்.
நீங்கள் பார்த்த கணவன் மனைவி கதைனு சொல்லுங்க...
நான் பார்த்த தம்பதிகளின் வாழக்கையில் நடந்த சில விஷயங்களில் இருந்து எடுத்திருக்கேன். ஆனால் முழுவதுமே குறிப்பிட்ட ஒரு தம்பதியின் கதை அல்ல. இன்று தமிழ் சமூகத்தில் அதிகரித்துள்ள விவாகரத்து பற்றி பேசி உள்ளேன்.
விவாகரத்திற்கு எந்த விதமான தீர்வை முன் வைத்துள்ளீர்கள்?
நான் எந்த தீர்வையும், அறிவுரையையும் படத்தில் வழங்கவில்லை. விவாகரத்து சரி, தவறு என்றும் சொல்லவில்லை. விவாகரத்தை பற்றி நான் உணர்ந்த, புரிந்து கொண்ட விஷயங்களை இங்கே பதிவு செய்ய முயற்சி செய்துள்ளேன்.
தலைவன் தலைவி பட கதையை நித்யா மேனனிடம் சொல்லும் போது ரியாக் ஷன் எப்படி இருந்தது?
இந்த படத்தில் நித்யா மேனனின் கேரக்டர் பெயர் 'பேரரசி'. இந்த கேரக்டரை நான் ஸ்கிரிப்ட்டில் எழுதும் போதே நித்யா மேனன் என் மனதில் உட்கார்ந்து விட்டார். படத்தின் கதையையும், பேரரசி கேரக்டரையும் நித்யாவிடம் சொன்னவுடன் உடனே நடிக்க ஒப்பு கொண்டார். இந்த பேரரசி கேரக்டர்க்கு நித்யா மேனனை தவிர வேறு எந்த ஹீரோயினும் என் மனதில் இல்லை.
நாயகன் விஜய் சேதுபதியுடன் முதல் முறை இணைந்துள்ளீர்கள்... என்ன சொல்கிறார் விஜய் சேதுபதி?
"இத்தனை வருடம் நாம எப்படி சேர்ந்து படம் பண்ணாம மிஸ் ஆனோம்" என்று அடிக்கடி கேட்டார் விஜய் சேதுபதி. படத்தின் பல காட்சிகள் ஹோட்டலில் படமாக்க பட்டன. ஷூட்டிங் இடைவேளயின் போது சமையல் செய்ய கிளம்பிவிடுவார். யூனிட்டில் இருந்த அனைவருக்கும் விதவிதமா சமைத்து போட்டார். எனக்கு பரோட்டா பிடிக்காது. ஆனால் விஜய் சேதுபதி பல வெரைட்டியில் பரோட்டா செய்து பரிமாறினார். விஜய் சேதுபதியின் அன்புக்காக பிடிக்காத பரோட்டாவை சாப்பிட்டேன். ஏதாவது சாப்பிட்டு, உடம்பு சரியில்லாமல் போனால் ஷூட்டிங் நடக்காமல் போகுமே என்று பயந்தோம். நல்ல வேளை, நான் பயந்த மாதிரி எதுவும் நடக்க வில்லை...
ஹீரோ, ஹீரோயின் தாண்டி படத்தில் ரசிக்கும் விஷயம் என்ன இருக்கிறது
யோகிபாபு இருக்கிறார்... முக்கியமான கேரக்டர் ரோல் ஒன்று செய்திருக்கிறார். தீபா- 'சித்தப்பு' சரவணன் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள். ஒரு லைவ் தம்பதியை, யதார்த்தமான பெற்றோர்களை இவர்களின் நடிப்பில் நீங்கள் பார்க்கலாம். படத்தில் முக்கியமான ஹைலைட்டாக நான் நினைப்பது சந்தோஷ் நாராயணின் இசையை தான். இந்த படத்தின் இசைக்காக லண்டன் சென்று அங்கே உள்ள சில பிரத்யேக இசை கருவிகள் கொண்டு படத்திற்கு இசை அமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் நீங்கள் கேட்கும் போது ஒரு புது வித அனுபவத்தை உணர்வீர்கள்.
மதுரையில் ஷூட்டிங் நடத்தி உள்ளீர்கள்... மதுரை மண் தந்த அனுபவம் எப்படி இருந்தது?
சினிமாவில் மதுரை என்றாலே வன்முறை என்பது போல் சித்தரிக்கிறார்கள். இது தவறானது என்பது புரிந்தது. மதுரை மக்கள் எங்கள் மீது மிகவும் அன்பு செலுத்தினார்கள். மதுரை ஒத்தக்கடை பகுதியில் ஹோட்டல் போல் ஒரு செட்டிங் அமைத்து படப்பிடிப்பு நடத்தினோம். தீபாவளி நாளில் ஷூட்டிங் நடந்தது. எங்களுக்காக வேட்டு வெடிக்காமல் ஒத்துழைப்பு தந்தார்கள். ஒவ்வொரு நாளும், "சாப்டீங்களா? இன்னும் ஏதாவது உதவி வேணும்னாலும் கேளுங்க" என்று அன்புடன் விசாரிப்பார்கள். மதுரை மக்கள் தந்த அன்பின் அனுபவத்தை மறக்க முடியாது.
தேசிய விருது வாங்கி விட்டீர்கள். பல படங்கள் இயக்கி உள்ளீர்கள். ஸ்டார் அந்தஸ்து உள்ள பெரிய ஹீரோவை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள்?
என் படத்தில் கதை தான் ஹீரோ. என் கதைக்கு தேவைப்பட்டால் பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்குவேன். ஸ்டார் அந்தஸ்து உள்ள பெரிய ஹீரோ வுக்காக படம் என்பது ஏன் ரூட் இல்லை!