பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் பசுபதி, ரோகினி, அம்முஅபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம்சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி உள்ள திரைப்படம் தண்டட்டி
தேனி மாவட்ட பகுதியில் வசித்து வரும் தங்கப் பொண்ணு என்னும் மூதாட்டி காணாமல் போகிறார். தங்கப் பொண்ணுவின் பேரன் தன் அப்பத்தாவைக் காணவில்லை என்று புகார் தர வருகிறான் .அவரைத் தேடும் புள்ளியில் தொடங்குகிறது கதை. உடல் நலகுறைவால் தங்கப் பொண்ணு இறந்து போக சிறுவனின் வேண்டுகோள் படி இறந்து போன உடலோடு ஊருக்கும் வருகிறார் பசுபதி
தங்கப் பொண்ணு இறப்பிற்குப் பின்னர் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தண்டட்டி காணாமல் போகிறது. அவரது தண்டட்டியைத் தேடி விசாரணை மேற்கொள்கிறார் போலீசான பசுபதி .
தங்கப் பொண்ணு ஏன் காணாமல்போகிறார், அவர் எப்படி இறந்து போகிறார், அவரது அடையாளங்களில் ஒன்றான தண்டட்டி எப்படித் திருடு போகிறது, அதைத் திருடியவர் யார், கண்டுபிடிப்பவர் எப்படி? என சற்று சுவாரஸ்யமில்லாமல் பயணிக்கிறது திரைக்கதை.
தங்கப் பொண்ணுவின் சுயநலமான பாசமில்லாத மகள்கள், மருமகள், குடிகார மகன் இவர்கள் தற்போதைய சுயநல உலகினை நம் கண்முன் நிறுத்துகிறார்கள்.
பசுபதியும் ரோகிணியும் தங்கள் கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து வழக்கம் போலவே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
ப்ளாஷ் பேக் காட்சியில் வரும் அம்மு அபிராமி தனது பெரிய கண்களில் நடிப்பில் மிரட்டுகிறார். சிறிது நேரமே வரும் ப்ளாஷ் பேக் காட்சிகள் சிறப்பு.
தங்கப் பொண்ணுவின் மகனாக குடிகாரனாக வரும் விவேக் பிரசன்னா தனது பாடிலாங்குவேஜ்-ல் பக்காவாக நடிப்பினை அள்ளி தெறிக்கிறார்.
இரண்டாம் பாதியில் தொய்வடையும் திரைக்கதையினை தூக்கி நிறு த்தியிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும். நகைச்சுவை காட்சியும் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.
மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவு கிராமத்தினை அழகாகக் காட்டுகிறது. கிராமத்தில் ஒரு சாவு வீட்டின் சந்தடி நெரிசல்களை இயல்பாய் , யதார்த்தமாய் உணர வைக்கிறது . கவனிக்க வைக்கிறார் கலை இயக்குனர் வீரமணி. சிவா நந்தீஸ்வரனின் படத்தொகுப்பு சிறப்பு.
மொத்தத்தில் "தண்டட்டி" பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் கிராமத்து கதை...இன்னமும் சுவை கூட்டியிருக்கலாம்...!