
1990கள் மற்றும் 2000களின் முற்பகுதியில் இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரம்பா. கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக டாப் ஹீரோயினாக வலம் வந்த ரம்பா எட்டு மொழிகளில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக தமிழ் , தெலுங்கு, இந்தி , மலையாளம் மற்றும் கன்னடம் தவிர, பெங்காலி, போஜ்புரி படங்களிலும் நடித்துள்ளார். இவர் வினீத்துடன் இணைந்து நடித்த சர்கம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். ரஜினி, கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட அப்போதைய காலகட்டத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்த பெருமை ரம்பாவிற்கு இருக்கிறது.
நடிக்க தொடங்கிய ஆரம்ப காலத்தில் குடும்பபாங்கான வேடங்களில் நடித்து வந்த இவர், சினிமா துறையில் நிரந்தர இடத்தை பிடிக்க 1990-களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் சுந்தர். சி இயக்கத்தில் கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன் கூட்டணியில் ரம்பா நடித்த 'உள்ளத்தை அள்ளித்தா' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதுடன் ரம்பாவின் சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த படத்தில் கவர்ச்சியாக நடிகை ரம்பா ஆடிய 'அழகிய லைலா' பாடலுக்கு, 90ஸ்-களில் தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. அதுமட்டுமின்றி இந்த பாடல் மூலம் தான் இவர் பிரபலமான நடிகையாக மாறினார் என்றே சொல்லலாம். தனது அழகு, கவர்ச்சியான நடிப்பு மற்றும் நேர்த்தியான ஆளை மயக்கும் நடனம் மூலம் நடிகை ரம்பா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார். அவருடைய ரசிகர்கள் அவரை ‘தொடை அழகி’ என்று அழைத்தனர்.
சினிமா உலகில் உச்ச நடிகையாக இருந்த போதே கடந்த 2010-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா கனடாவில் செட்டில் ஆனார். இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகு ரம்பா சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டு முழு குடும்ப தலைவியாக மாறினார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு அதாவது 15 ஆண்டுகள் கழித்து தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ஜோடி ஆர் யூ ரெடி' என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ரம்பா. இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்ததற்கான காரணத்தை நடிகை ரம்பா தற்போது தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரம்பா, ரீ-என்ட்ரி குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, குடும்பம், குழந்தைகள் என பொறுப்புகளை கவனித்துக் கொள்ள நடிப்பிலிருந்து விலக வேண்டியிருந்ததாக கூறிய ரம்பா, இப்போது குழந்தைகள் பெரியவர்களாகி விட்டதால், அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்ய முடியும் என்று கூறினார். 'நான் நடிப்பை எவ்வளவு விரும்புகிறேன் என்று எனது கணவருக்கு தெரியும்' என்றும், 'அவரது ஆதரவுடன் தான் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கினேன்' என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தன்னால் சரியாக செய்ய முடியுமா என்று ஒரு கட்டத்தில் சந்தேகித்த போது , முழு குடும்பமும் தன்னை ஊக்குவிக்க ஒன்று சேர்ந்ததாக ரம்பா கூறினார். முதல் முறையாக ஒரு படத்தில் நடித்தபோது இருந்ததை விட இரண்டாவது இன்னிங்ஸில் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க மிகவும் பதட்டமாக இருந்ததாகவும், ஆனால் மேடையில் வந்து இரண்டு அடிகள் வைத்தவுடன், அந்த பதற்றம் எல்லாம் நீங்கி, பழைய தாளத்திற்குத் திரும்பியதாகவும் அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி சமீபத்தில், ஒரு திறப்பு விழாவிற்குச் சென்றிருந்தபோது, தன்னைப் பார்க்கவும், தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ரசிகர்கள் போட்டி போடுவதைக் கண்டு தான் ஆச்சரியப்பட்டதாக கூறினார். தன் மீது மிகுந்த அன்பும் பாசமும் காட்டும் ரசிகர்களின் ஆதரவைப் பெறுவதற்காக மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். சினிமா எப்போதும் தனது முதல் காதல், நடிப்பு தனது இரத்தத்தில் கலந்த ஒன்று என்றும், சவாலான வேடங்களில் நடிக்க விரும்புவதாகவும், மீண்டும் தெலுங்குத் திரையில் தோன்றப் போவதாகவும் ரம்பா கூறினார்.