லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் படம் குறித்த அப்டேட்டை ரெட்ரோ படம் பார்த்து முடித்ததும் பேசியிருக்கிறார். இதுகுறித்தான முழு விவரத்தையும் பார்ப்போம்.
தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ்பெற்றவர் சூர்யா. சூர்யாவின் படம் சமீபக்காலமாக அவ்வளவாக வெளியாகாமல் இருந்து வந்தது. பலரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் திரைக்கு வந்தது. இப்படம் பெரியளவு பொருட்செலவில் ஒரு வரலாற்றுக் கலந்த ஃபேண்டஸி படமாக உருவாகியிருந்தது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரியளவு எதிர்பார்ப்புகள் இருந்தன. ஆனால், வசூல் ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. மேலும் சமூக வலைதளங்களில் இந்தப் படத்தைப் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள். இனி சூர்யா அவ்வளவுதான் போல என்றெல்லாம் கூறினார்கள். ஆனால், சிலர் இப்படத்தை விரும்பவே செய்தார்கள் என்பதும் உண்மை.
இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் பல எதிர்பார்ப்புகளை தாங்கி நின்றது. இப்படம் சூர்யாவின் கம்பேக்காக அமையுமா என்பதுபோன்ற கேள்விகளும் எழுந்தன.
இதற்கிடையே இன்று ரெட்ரோ படம் வெளியானது. ஆனால், கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அந்தவகையில், இன்று காலை ரசிகர்களுடன் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் FDFS பார்த்து வெளியேறும்போது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார்.
ஒருவர் ரோலக்ஸ் படம் பற்றி கேட்க லோகேஷ் கனகராஜ், கண்டிப்பா ரோலக்ஸ் படம் வரும், கூலி படம் முடித்த பிறகு கைதி 2 படம் துவங்கவுள்ளது. அதன் பிறகு கண்டிப்பாக ரோலக்ஸ் உருவாகும் என்றார் லோகேஷ் கனகராஜ். ஆனால் ரோலக்ஸ் எப்போது துவங்கும் என தற்போது உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் கண்டிப்பாக ரோலக்ஸ் படம் நடக்கும் என உறுதியாக கூறினார் லோகேஷ்.
லோகேஷ் கனகராஜ் 2016 ஆம் ஆண்டு வெளியான அவரது அறிமுகத் திரைப்படமான மாநகரம், விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம், ஒரே நாளில் சென்னையில் நடக்கும் நான்கு வெவ்வேறு கதைகளை பின்னணியாகக் கொண்டு பரபரப்பான திரைக்கதையுடன் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முந்தைய படத்தின் கதாபாத்திரங்களையும் புதிய கதாபாத்திரங்களையும் இணைத்து அவர் உருவாக்கிய "லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்" (LCU) ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த யுனிவர்ஸ், ஆக்ஷன் மற்றும் திரில்லர் திரைப்படங்களுக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜின் திரைப்படங்கள் விறுவிறுப்பான திரைக்கதை, யதார்த்தமான சண்டைக் காட்சிகள் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்பிற்காகப் பாராட்டப்படுகின்றன.