
கமர்சியல் படங்களில் தற்போது கதாநாயகிகளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்று நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரேகா புதிய படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மாலதி நாராயணன் இயக்குகிறார். மேலும் படத்தில் எழில் துறை, சினேகா குமார், அனிதா சம்பத், ஆஷிக், மாலதி நாராயணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு மிரியம்மா என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 72 ஃபிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தினுடைய ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கதாநாயகி ரேகா பேசியது, மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதற்கு இயக்குனருக்கு நன்றி. எனக்கு பணம் ஒரு பொருட்டல்ல, நல்ல கதை தான் தேவை. நல்ல கதையின் கதாபாத்திர மக்களிடம் சென்று அடையும். இதனால் மக்கள் கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டே நம்மை அழைப்பார்கள். இப்படி தமிழில் பல படங்கள் எனக்கு அமைந்திருக்கிறது. ’மிரியம்மா’ திரைப்படத்தையும் நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
இயக்குனர் படத்தின் கதையை செல்போனில் கூறிய போது எனக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தற்போது திரைத்துறையில் பெண்களை மையப்படுத்தி படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதேநேரம் பெரும்பான்மையான கமர்சியல் திரைப்படங்களில் பெண்களுக்கான முக்கியத்துவம் இல்லை. முக்கிய நடிகர்களின் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் குறைந்து இருக்கிறது.
தற்போது எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தி இருக்கிறேன் என்று நம்புகிறேன். பெண்களுடைய வாழ்க்கை சூழ்நிலை மையப்படுத்தி இப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது மக்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.