லியோ தயாரிப்பாளருக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள்!

லியோ போஸ்டர்
லியோ போஸ்டர்

யக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் மீது தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பும் பெரிய அளவிலான சர்ச்சைகளை சந்தித்தது. வெளிவந்த பிறகும் லியோ திரைப்படத்தின் மீதான சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. தற்போது லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.

லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் திரையரங்குகளிடமிருந்து 75 சதவீதம் முதல் 80 சதவீதம் வருமானத்தை கேட்பதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர். இதுகுறித்து திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கங்களின் உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணி தெரிவித்தது, முன்பு முன்னணி நடிகர் நடித்த திரைப்படங்களின் விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீதம் வரை வருமானத்தில் பங்கு கொடுக்கப்பட்டது. மற்ற நடிகர்களின் படங்களுக்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை வருமானத்தில் பங்கு கொடுக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியதால் அப்போது விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திற்கு 75 சதவீதம் வருமானத்தை வினியோகஸ்தர்களுக்கு தர தியேட்டர் உரிமையாளர்கள் சம்மதித்தனர்.

திருப்பூர் சுப்ரமணி
திருப்பூர் சுப்ரமணி

அது அந்த இக்கட்டான சூழலுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறினோம். ஆனால் அதற்குப் பிறகும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் பொழுது விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்களிடம் 75 சதவீதம் வருமானத்தை கேட்டு கட்டாயப்படுத்துகின்றனர். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் திரையரங்குகளிடமிருந்து 80 சதவீதம் வருமானத்தை கேட்டனர்.

அதற்கு பெருவாரியான திரையரங்குகள் மறுப்பு தெரிவித்தது. இதை அடுத்து கடைசி நேரத்தில் 75 சதவீதம் வருமானத்தை தருவதாக ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் படம் வெளியிடப்பட்டது. ஒரு படத்தில் சம்பாதிக்கும் 75 சதவீதம் தொகையை தயாரிப்பு நிறுவனம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் செலவு செய்து, படங்களை திரையிடும் போது ஏற்படும் சிக்கல்களை சமாளித்து வெளியிடும் தியேட்டர்கள் 25 சதவீதம் வருமானத்தை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்றால் எப்படி லாபம் கிடைக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் எப்படி பயன்பெறுவார்கள்.

மேலும் லியோ திரைப்படத்தினுடைய தயாரிப்பாளர் ஓடிடி விற்பனையில் மிகப்பெரிய தொகையை பெற்றிருக்கிறார்‌. மேலும் சில பகுதிகளில் அவரே வினியோகிஸ்தராகவும் செயல்பட்டு இருக்கிறார். இப்படி அதிக லாபத்தை ஈட்டியும் கூட திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து கூடுதலான தொகையை எதிர்பார்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இது திரையரங்கு உரிமையாளர்களை நஷ்டம் அடைய செய்யும்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டினர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com