பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் நடிகை சௌகார் ஜானகி அணிந்திருந்த கருப்பு உடை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அது வடிவமைக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள கதைப் பற்றி பார்ப்போம்.
1964ம் ஆண்டு வெளியான படம் புதிய பறவை. தாதா மிராசி இயக்கிய இந்தப் படத்தை சிவாஜி கணேசனே தயாரித்து நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் சரோஜாதேவி, சௌகார் ஜானகி ஆகியோர் நடித்தனர். இப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரட்டாக உள்ளன. இதில் வரும் கோபால், லதா கதாபாத்திரங்கள் வைத்து விவேக் காமெடி கூட ஹிட்டானது.
அதேபோல் இப்படத்தில் இடம்பெரும் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை அஜித், பாவனா நடித்த அசல் படத்தில்கூட ரீமேக் செய்திருப்பார்கள்.
அந்தளவுக்கு ஹிட்டான இந்தப் பாடலில் சௌகார் ஜானகி அணிந்திருந்த உடைக்கு பின்னால் ஒரு சுவாரசிய கதை உள்ளது.
இந்தப் பாடலில் சௌகார் ஜானகி அணிந்திருந்த உடை ஒரு புடவை என்று நாம் நினைப்போம். ஆனால், அதுதான் இல்லை. இது ஒரு Customized dress. இவர் இந்த பாடலில் நடிக்க வரும்போது, காஸ்ட்யூம் டிசைனர்ஸ், பின் ஆடும் நடனக் கலைஞர்களுக்கு கொடுத்த அதே உடையை சற்று நிறம் மாற்றிக் கொடுத்தார்கள். ஏனோ, அந்த உடை சௌகார் ஜானகிக்குப் பிடிக்கவில்லை. ஆகையால், அவர் சற்றுத் திரும்பி சிவாஜி கணேசனை பார்த்து சில நிமிடங்கள் அவகாசம் கேட்டார்.
சிவாஜி கணேசன்தான் படத்தின் தயாரிப்பாளர் ஆயிற்றே, சரி என்று தலையாட்டினார். இந்த குறுகிய நேரத்தில் இவர் என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். உடனே சௌகார் ஜானகி அறைக்குள் சென்று தனது அலமாரியிலிருந்து ஒரு புடவையை எடுத்தார்.
அந்தப் புடவை ஹாங்காங் சென்றபோது அவர் வாங்கியது. பின் அவருடைய சகோதரி மற்றும் சிகை அலங்கார நிபுணரை உதவிக்கு அழைத்துக்கொண்டார். அந்த புடவையை முற்றிலுமாக புதிய வடிவமைப்பில் மாற்றினார். அந்த உடயை உடலை ஒட்டி அணிந்துக் கொண்டு, அதற்கேற்றவாரு முடியையும் ஸ்டைல் செய்தார்.
அவர் அறையைவிட்டு வெளியில் வந்ததும், அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்றனர். ஆம்! நீங்கள் கவனித்தீர்கள் என்றால், நாம் பின்னாடி விடும் முந்தானியை அவர் இடது பக்கம் தொங்கவிட்டிருப்பார். நீங்கள் அந்த ஸ்டைலை உற்றுப் பார்க்கும்போது புடவை மாதிரியும் தெரியும் அதேசமயம் வேறு உடை மாதிரியும் தெரியும்.
இப்போது எத்தனை புடவை அணியும் ஸ்டைல்கள் வந்தாலும், 1960களில் சௌகார் ஜானகியின் இந்த ஸ்டைல் இன்றுவரை தனித்துவமாகவே இருந்து வருகிறது.