சிம்பு திருமணத்துக்காக கோயிலில் வழிபட்ட டி.ஆர்.

சிம்பு திருமணத்துக்காக கோயிலில் வழிபட்ட டி.ஆர்.
Published on

திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவரும், இலட்சிய திமுகவின் நிறுவனருமான டி.ராஜேந்தர், திடீரென புகழ்பெற்ற காஞ்சிபுரம் வழக்கறுதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயில்களுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அது மட்டுமின்றி, காஞ்சி வழக்கறுதீஸ்வரர் கோயிலில் சாமியின் பாதத்தில் தமது மகன் சிலம்பரசனின் ஜாதகத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை வழிபாடு செய்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தாம் சமீபத்தில் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மீண்டும் மறுபிறவி எடுத்து வந்துள்ளதாகவும், ஏற்கெனவே ஒரு முறை ஒரு பீப் பாடல் பிரச்னையின்போது இந்தக் கோயிலுக்கு வந்து தனது குறைகளை வழக்கறுதீஸ்வரரிடம் கோரிக்கையாக வைக்க, அந்தப் பிரச்னை சுமூகமாக தீர்ந்தது” எனவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அவரது மகன் சிலம்பரசனின் திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கும் எனது மனைவிக்கும் பிடித்த பெண் என்பதைத் தவிர்த்து, எனது மகன் சிலம்பரசனுக்குப் பிடித்த ஒரு திருமகளை தேர்வு செய்யும் பொறுப்பை இந்த வழக்கறுதீஸ்வரிடமே விட்டு, அது குறித்த கோரிக்கையை அவர் முன் வைத்துள்ளேன். இந்தக் கோரிக்கையையும் அவர் சிறப்பாக நிறைவேற்றித் தருவார் என நம்புகிறேன். அதேபோல், சிலம்பரசனின் திருமணத்தை அவரது ரசிகர்கள் உள்ளிட்ட நல் உள்ளம் கொண்ட அனைவரும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கின்றனர்” என்றார்.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் பிரமுகர்கள் பலரும் இதற்கு முன், கோர்ட், வழக்கு என தங்களது பிரச்னைகளுக்காக காஞ்சி அருள்மிகு வழக்கறுதீஸ்வரர் கோயிலில் ஹோமம் போன்ற பல்வேறு வழிபாடுகளை நடத்தியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com