சமீபத்தில் மலேசியாவில் மலேசியா தமிழர்களால் தயாரிக்கப்பட்டு வெளியான 'பூச்சாண்டி வர்றான்' திரைப்படம், அந்த நாட்டில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ் நாட்டிலும் வெளியாகி, வித்தியாசமான படம் என்ற பாராட்டை பெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீசுக்காக சென்னை வந்திருந்த டைரக்டர் விக்கியிடம் சில கேள்விகள்….
மலேசியாவில் இப்படியொரு திரைப்படம் எடுக்கும் எண்ணம் எப்படி வந்தது?
அங்கு 1990 காலகட்டத்திலிருந்தே மக்கள் குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தமிழ் சினிமாக்களை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு காலகட்டத்தில் படம் எடுக்கவும் முயற்சித்தனர். இங்கே படம் எடுப்பது சுலபமான விஷயம் இல்லை. அந்த வகையில் பல முயற்சிகளுக்கு பின் இந்த படம் மலேசிய மக்களை ரீச் ஆனது. தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் தொடர்புள்ள கடாரம் என்ற கான்செப்டை எடுத்து கொண்டேன்.
இங்கே உள்ள மற்ற இயக்குனர்களின் பொதுவான படங்கள் பற்றி.?!
பொதுவாக இங்கே காதல், கல்லூரி,நகைசுவை போன்ற தளங்களில் படம் எடுக்கிறார்கள். ஸ்கிரிப்ட், விவாதம் போன்ற விஷயங்களில் பக்குவம் குறைவாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
இந்த குறையை போக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?
கதையை முடிவு செய்தவுடன் சென்னையில் உள்ள என் நண்பர்கள் மூலம் உதவி இயக்குனர்களிடம் கதையை சொல்லி பூச்சாண்டியை மெருகேற்றினேன். தமிழ் நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்த முயற்சித்தேன்.ஆனால் சூழ்நிலை காரணமாக முடியவில்லை. மலேசியாயாவில் படமாக்கினோம். மதுரை தமிழ், கோவை தமிழ், நெல்லை தமிழை தமிழ் நாட்டு மக்கள் புரிந்து கொள்வதை போல மலேசியா தமிழையும் தமிழ் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் மலேசியா தமிழில் மலேசியா நடிகர்களை வைத்து படம் இயக்கினேன். தமிழ் மக்களும் ஏற்று கொண்டார்கள்.
உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது என்ன விதமான பிரச்சனைகளை எதிர்கொண்டீர்கள்?
மலேசியாவில் ஒரு மலேசியா தமிழ் படம் வெளியாகும் சூழலில் ஒரு பெரிய நடிகரின் தமிழ் படம் வெளியானால் மலேசியா படத்தை அப்படியே நிறுத்தி விடுவார்கள். அதிர்ஷ்டவசமாக ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய RRR மற்றும் வலிமை படங்கள் ரிலீசாவது தள்ளி போனதால் பூச்சாண்டிக்கு எந்த பிரச்சனையும் இருக்க வில்லை அந்த நாட்டு விமர்சகர்களும் பாசிட்டிவ் விமர்சனம் மட்டுமே எழுதினார்கள்.
'பூச்சாண்டி வர்றான்' ஒன்லைன் எப்படி எடுத்தீர்கள்?
இங்கே கடாரம் (kedah) என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சி நடை பெற்றுகொண்டு இருக்கிறது.எனக்கும் இதில் ஆர்வம் அதிகம். கடாரத்திற்கும் தமிழகத்திற்கும் வணிக தொடர்பு இருந்துள்ளது. ராஜேந்திர சோழர் கடாரம் வரை படை எடுத்து வந்துள்ளார். கடாரத்திற்கும் நம் தமிழ் நாட்டிற்கும் உள்ள உறவை ஒன்லைனாக வைத்து சஸ்பென்ஸ் வகையில் இப்படத்தை உருவாக்கினேன்.
சரி.. உங்கள் அடுத்த பிராஜெக்ட் என்ன?
இங்கே கொரிய, தாய் மொழி படங்களை பார் ப்போம். மொழி புரியவில்லை என்றாலும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். இது போன்று படங்களை இயக்குவதே என் விருப்பம். எனது அடுத்த படம் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்படும் பான்டஸி படமாக இருக்கும்.