ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2'. இந்த படம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதியன்று வெளியாகிறது.
இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர் 2' படத்தில் கதையின் நாயகனாக 'ராக்கிங் ஸ்டார்' யஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு.. ரவி பஸுரூர் இசையமைப்பு!
'கே ஜி எஃப் 2' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகை ஈஸ்வரி ராவ், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, நடிகர் சரண் இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் படத்தின் கதாநாயகனான 'ராக்கிங் ஸ்டார்' யஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வசனகர்த்தா அசோக் பேசுகையில், '' கே ஜி எஃப் 2 படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு டப்பிங் படம் என்ற உணர்வு ஏற்படாமல், முழுமையாகவே தமிழில் எழுதி பேசி நடித்திருக்கிறார்கள்'' என்றார்.
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், " படப்பிடிப்பு தளத்தில் ராக்கிங் ஸ்டார் யஷ் நிஜ நட்சத்திர நாயகனைப் போல் எங்களிடம் அக்கறையும், அன்பும் காட்டினார். தயாரிப்பாளர், இயக்குநர், ராக்கிங் ஸ்டார் மூவரும் இணைந்து உருவாக்கிய கே ஜி எஃப் உலகத்தை காண ஏப்ரல் 14ஆம் தேதி வரை காத்திருக்க முடியாது. இந்த உலகை காண உற்சாகமாக வாருங்கள். கொண்டாடுங்கள். அற்புதமான அனுபவத்தை பெறுங்கள். வெற்றிபெற செய்யுங்கள்." என்றார்.
படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், "
திரைப்பட துறையில் பிரம்மாண்டத்திற்கு என எப்போது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. டைரக்டர் ஷங்கர் சார், ராஜமௌலி சார், இப்போது பிரசாந்த் நீல் சார் என்று சினிமாவில் பிரமாண்டத்தை புகுத்தினர். அப்படி பிரமாண்டமாக உருவான கே ஜி எஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வெளியாகிறது.தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாகி இருப்பதால் கொண்டாட்டமான காலகட்டம். இரண்டு படங்களையும் பார்த்து கொண்டாடுங்கள். இயக்குநர் பிரசாந்த் நீல் விரைவில் தமிழிலும் திரைப்படத்தை இயக்க வேண்டும். ராக்கிங் ஸ்டார் யஷ்சுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் உருவாகி இருப்பதால், நீங்களும் தமிழில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். " என்றார்.
'ராக்கிங் ஸ்டார்' யஷ் பேசுகையில், " மூன்று ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பர் விஷால் மூலம் கேஜிஎப் படத்தின் முதல் பாகத்தை வெளியிட்டோம். அதற்கு ஆதரவு அளித்ததற்காக இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் அன்பறிவு இதற்கு சிறந்த உதாரணம். சண்டைக் காட்சிகளின் போது ஒவ்வொரு ஷாட்டிலும் மிகுந்த அக்கறையுடன் பாதுகாப்பு அம்சங்களை ஒன்றுக்கு பல முறை ஆய்வு செய்து பிறகு நடிகர்களை அக்காட்சியில் நடிக்க வைப்பார்.. அவருடைய கடின உழைப்பிற்கு, படத்தின் முதல் பாகத்தில் பணியாற்றியதற்காக அன்பறிவு மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது.
கேஜிஎப்பைப் பொருத்தவரை சாதாரண டப்பிங் படமாக அல்லாமல் அந்த வகையில் தமிழ் மண்ணின் நேட்டிவிட்டி மாறாமல் வசனம் எழுதியதற்காக வசனகர்த்தாவிற்கு பிரத்யேக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் படங்களில் தமிழில் பின்னணி பேச முயற்சிக்கிறேன்''
-இவ்வாறு தெரிவித்தார்..