புழு; திரைப்பட விமர்சனம்!

புழு; திரைப்பட விமர்சனம்!
Published on

-தனுஜா ஜெயராமன் 

கேரள மம்முட்டி நடிப்பில் புதுமுக பெண்இயக்குனர் ரதீனா இயக்கிய மாறுபட்ட மொழிமாற்ற (தமிழில்) திரைப்படம் புழு. 

முதலில் இப்படியான நெகடிவ் கேரக்டரில் நடித்த மம்முட்டியின் துணிவு பாராட்டுக்குரியது. பல்வேறு முகபாவங்களில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடித்திருப்பது இருப்பது படத்துக்கான மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் எனலாம். தங்கையாக பார்வதியும் அவரது கணவராக அப்புனி சசியும் நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். குறிப்பாக அப்புனி சசியின் அமைதியான அபாரமான நடிப்பு பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
மம்முட்டியின் மகனாக நடிக்கும் சிறுவனின் நடிப்பும் பிரமாதம். 

படத்தில் நாடக கலைஞராக வரும் அப்புனி சசியை மம்முட்டியின் தங்கையான பார்வதி காதலித்து திருமணம் செய்கிறார். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் மம்மூட்டி தனது மகனிடமும் வேலைகாரர்களிடமும், தங்கை மற்றும் தங்கைக் கணவரிடமும் நடந்து கொள்ளும் மற்றொரு முகம்  நம்மை சற்று யோசிக்க வைக்கிறது. நாடகத்தில் அடிக்கடி வரும் பரிஷித்து மகாராஜா கேரக்டர் மம்முட்டியினுடையது. அதனை கோடிட்டு காட்டவே புழு என படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

படம் முழுவதும் மம்முட்டியை கொல்ல முயற்சிகள் நடக்கிறது . அந்த முயற்சி வெற்றியடைந்ததா என்பதே கதை.  மம்முட்டியின் கேரக்டரானது நம்மிடையே உலவும் சில வித்தியாசமான குரூர சிந்தனையாளர்களை ஞாபகப்படுத்துகிறது. இந்த படம் சமூகத்தில் காணப்படும் சாதி,மதம், கௌரவம், அந்தஸ்து குறித்த பல்வேறு முகமூடிகளை அப்பட்டமாக தோலுரித்து காட்டுகிறது. 

"உங்களை எனக்கு பிடிக்கலைப்பா" என மகன் சொல்லும்போது மம்முட்டி காட்டும் பலவித முகபாவங்கள் அவரது சிறப்பான நடிப்பிற்கு சான்று. மம்முட்டி என்ற தேர்ந்த நடிகரால் படம் முழுபலம் பெறுகிறது. இறுக்கமான முகபாவங்களால் ஒருபுறம் மம்முட்டி அசத்த,  மறுபுறம் நாடக நடிகராக தனது வலிகளை சிரித்தபடி சொல்லும், கருணை ததும்பும் விழிகளில் காட்டி நம்மை அசத்துகிறார் அப்புனி சசி. குறிப்பாக பார்வதியின் அம்மாவை பார்த்துவிட்டு இருவரும் நடந்து வரும் காட்சியில் வரும் கம்பீரமும் பெருமிதமும் அவரின் நடிப்பாற்றலுக்கு மிகச்சிறந்த சான்று.

க்ளைமாக்ஸ் மம்முட்டியின் வெறித்தனம் நம்மை பதறவைக்கிறது. அதிகார வெறியில் ஏழைகளை பந்தாடும் போலீஸ் நடவடிக்கைகளாகட்டும் , மகனிடம் காட்டும் கொடூர கண்டிப்புகளாகட்டும், தங்கையிடம் காட்டும் வெறுப்பு, அவரது கணவரிடம் காட்டும் ஏற்றத்தாழ்வுகளாகட்டும் அனைத்திலுமே தனது நடிப்பால் ஸ்கோர் செய்கிறார் மம்முட்டி.. 

மொத்தத்தில் ஜாதி மத அஸ்தஸ்து பேதங்களின் கொடூரமுகம், சமூகத்தில் மெத்த படித்து பெரிய பதவிகளில் பெரிய மனிதர்களாக உலாவுபவர்களின் சைக்கோதனமான மறுமுகங்கள் என பலவற்றை தோலுரித்து காட்டுகிறது இத்திரைபடம். சோனி லைவில் கண்டுகளிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com