ஒரே மேடையில் 75 பாடகர்கள்!

ஒரே மேடையில் 75 பாடகர்கள்!
Published on

-லதானந்த்

ந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாதகப் பறவைகள் அமைப்பு, முதன்முறையாக 75 பாடகர், பாடகியரை ஒரே மேடையில் ஒன்றிணைத்து ஒரு நாள் முழுவதும் இசைத் திருவிழாவாகக் கொண்டாடும் நிகழ்ச்சியை அரங்கேறப்போகிறது.

-இதுகுறித்துச் சாதகப் பறவைகள் அமைப்பு தெரிவித்ததாவது;

சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், மற்றும் உணவகங்கள், கடைகள் ஆகியன இடம் பெறும்.

இந்நிகழ்ச்சியின் மூலம் UNITED SINGERS CHARITABLE TRUST என்ற அமைப்பிற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும் இது அமையும். அனைத்துத் துறைகளிலிருந்தும் 75 முக்கிய பிரமுகர்களை இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். 

இந் நிகழ்ச்சியை 3 பகுதிகளாக வடிவமைத்துள்ளோம்.காலை 10 மணியளவில் இந்நிகழ்ச்சி பிரபலங்களுடன் துவங்கி, பின் திரையிசைப் பாடகர்களுடன் பகல் 12 மணி வரை நடைபெறும்.அடுத்த பகுதி 3 மணியிலிருந்து 5 மணி வரையிலும், அதற்கடுத்த பகுதி மாலை 6.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் நடைபெறும். கடைசிப் பகுதியில் திரையிசைத் துறையில் சாதித்த சாதனையாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

பார்வையாளர்கள் அனைவரையும் திரையிசைத் துறையின் 75 வருடத்திற்குப் பின்னோக்கி அழைத்துச்செல்லும் அளவுக்கு நிகழ்ச்சிகள் இருக்கும். தொடக்கத்தில் G.ராமநாதன் ஐயர், பாபநாசம் சிவன் மற்றும் S.M.சுப்பையா நாயுடு அவர்கள் இசையமைத்த பாடல்களில் துவங்கி, பின் M.S.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, K.V.மகாதேவன் மற்றும் V.குமார் அவர்களின் பாடல்களை பாடவிருக்கிறார்கள். 

இந்நிகழ்ச்சியில் இளையராஜா மற்றும் A.R.ரஹ்மான் ஆகியோரின் பாடல்களைத் தனிப் பகுதியாகவே பாடத் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் தேவா, வித்யாசாகர் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்களும் இடம்பெறும் இளம் இசையமைப்பாளர்களான D.இமான், அனிருத் ரவிச்சந்தர், சந்தோஷ் நாராயணன் போன்ற பல இசையமைப்பாளர்களின் பாடல்களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும்.

சிறப்பு அம்சமாக அனைத்துப் பிரபலங்கள், பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் நம் தேசிய கீதத்தை ஒன்றாக இணைந்து பாடி நிகழ்ச்சியை நிறைவுசெய்வார்கள். இந்நிகழ்ச்சிக்கான விளம்பரங்களை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து அனைத்து வணிக வளாகங்கள், கடற்கரை, IT நிறுவனங்கள் இதர பொது இடங்களிலும் சிறிய நிகழ்ச்சிகள் மூலம் தொடங்கப்படும். 

இந்த விழாவில் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த நம் மாநிலத்தை சேர்ந்த சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருதுகளும் வழங்கப்படும்.

-இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com