சமீப காலமாக தமிழ் வெப் தொடர்கள் பல்வேறு பார்வையாளர்களின் கவனம் பெறுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான சுழல் -The Vortex வெப் தொடர் உலகெங்கும் உள்ள ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
புஸ்கர் –காயத்ரி எழுத்தில் உருவான சூழல் தொடரின் முதல் நான்கு எபிசோட்களை பிரம்மாவும் அடுத்து வரும் நான்கு எபிசோட்களை அனுசரணும் இயக்கி உள்ளார்கள்.
நீலகிரி மாவட்டம் சாம்பலூரில் உள்ள ஒரு தொழிற்சாலை தீப்பிடிக்கிறது.இதற்கு காரணமாக அதன் தொழிலாளர்கள் தலைவர் சண்முகத்தை (பார்த்திபன் )கைது செய்கிறது காவல் துறை.அடுத்த நாள் சண்முகத்தின் மகள் நிலா காணாமல் போகிறாள். இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ரெஜினா( ஸ்ரேயா ரெட்டி )மகனும் காணவில்லை. இவர்கள் இருவரும் காதலர்கள். ஊரை விட்டு ஓடி விட்டார்கள் என ஊர் பேசி வருகிறது. ஒரிரு நாளில் இந்த இருவரின் பிணங்களும் ஒரு நீர் நிலையிலிருந்து கண்டெடுக்கபடுகிறது. இந்த இரட்டை கொலைகளின் பின்னணியில் யார்? தொழிற்சாலை தீ விபத்தின் காரணங்கள் என்ன என விடைகளை தேடி பரபரக்கிறது திரை கதை.
இப்படி ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் திரில்லர் படம் பார்த்து நாளாகி விட்டது. காட்சிக்கு காட்சி பரபரப்பு, ஒவ்வொரு தொடர் முடிவிலும் ஒரு ட்விஸ்ட் என செதுக்கியிருக்கிறது சூழல் டீம்.இன்ஸ்பெக்டர் ஆக மிடுக்கும், குடும்ப தலைவியாக எமோஷனல் அம்மாவாக பொருந்தி போகிறார். முதலாளி ஆக வரும் யூசுப் ஹுசைன் அடக்கமான நடிப்பை தந்துள்ளார். பார்த்திபன், கதிர், ஹரிஷ் உத்தமன்,குமரவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் என அனைத்து நட்சத்திரங்களும் சரியான நடிப்பை தந்துள்ளார்கள்.நடிகர்கள் பலர் நடித்திருந்தும், யாரும் வீணாக்க படவில்லை. எந்த ஒரு காட்சியும் அவசியம் இல்லாமல் வைக்கவில்லை.
மயான கொள்ளை என்ற நிகழ்வை படத்தில் கதையில் இணைத்து இருக்கிறார்கள். ஒன்பது நாள் மயான கொள்ளை சம்பவங்களை கண்முன்னே நிறுத்தி இருக்கிறார்கள். கலை இயக்குனர் அருண் வெஞ்சரம் மூடு மற்றும் ஒளிப்பதிவாளர் முகேஷ் இணைந்து ஒரு விஷ்வல் அற்புதத்தை தந்துள்ளார்கள்.
நமது நாட்டில் நடக்கும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றி அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார்கள் புஸ்கர் காயத்ரி. இந்த துன்புறுத்தலுக்கு அந்த குழந்தைகளுக்கு தெரிந்த உறவினர்களோ அல்லது அக்கம் பக்கத்தினரோ காரணமாக இருக்கிறார்கள் என்பதை இத்தொடர் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது.
சூழல் –தேவை பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் மீதான அக்கறை – ராகவ் குமார்