வாய்தா; எளியவர்களுக்கு மறுக்கப்படும் நீதி!

வாய்தா; எளியவர்களுக்கு மறுக்கப்படும் நீதி!
Published on

 -ராகவ் குமார்

உலக சினிமா எல்லாமே அந்தந்த மண்ணின் பிரச்சனைகளை திரையில் பேசும் படம்தான். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி பல்வேறு தரப்பினரை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் வாய்தா. இந்த படம் நமது இந்திய நீதிமன்றங்களின் நிர்வாக குளறுபடிகளை வலியுடன் சொல்லி உலக அரங்கில் பாரா ட்டை பெற்றுள்ளது.

படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு திரைப்பட விழாகளில் திரை இடப்பட்ட இப்படத்தின் இயக்குனர் மகிவர்மன். இப்படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர் மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சேலத்தில் ஒரு சிறிய ஊரில் சலவை தொழிலாளி இருக்கிறார். அந்த ஊர் ஆதிக்க சாதியின் முக்கிய பிரமுகரின் மகன் போனில் பேசியபடி பைக் ஓட்டி,  சலவை தொழிலாளி ராமசாமியின் வலது கையை ஒடித்து விடுகிறார். இதனால் வேலை செய்ய முடியாமல் திண்டாடுகிறார் தொழிலாளி.  ஊரில் இருக்கும் மற்றொரு  அரசியல் ஜாதி கட்சி தலைவர் ஒருவர் அந்த சலவை தொழிலாளிக்கு உதவுவதாக சொல்லி வழக்கு போட தூண்டுகிறார்.நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா போட்டு வழக்கு இழுத்து கொண்டே செல்கிறது. ஒரு கட்டத்தில் ஜாதி அரசியல் கட்சி தலைவரும், விபத்தை ஏற்படுத்திய நபரின் குடும்பமும் ஒன்று சேர்க்கிறது.

இந்நிலையில் தொழிலாளியின் வழக்கறிஞர் வழக்கை வாபஸ் வாங்க கூடாது என்று பிடிவாதமாக இருக்கிறார். வழக்கு என்ன ஆனது, பாதிக்க பட்ட சலவை தொழிலாளிக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் சொச்ச கதை! தற்கால நீதிமன்றங்களில் நிலவும் 'ஏழைக்கு நீதி எட்டாக்கனி' என்பதை ஆணித்தரமாக பதிவு செய்துள்ளார் டைரக்டர்.

காட்சிக்கு காட்சி – பாதிக்கபட்ட அந்த முதியவருக்கு நீதி கிடைக்க வேண்டுமே என பார்வையாளர்களையும் நினைக்க வைப்பதுதான் டைரக்டரின் வெற்றி.     வறியவர்களுக்கு நீதிமன்றம்தான் கடைசி புகலிடம் என்று ஒரு வாக்கியம் உண்டு. இது உண்மையில்லை. 'நீதிமன்றம் கோவிலு மில்லை. நீதிபதிகள் கடவுளும் இல்லை' என்பதை வாய்தா அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.

வெளியில் இருக்கும் வர்ணமும், வர்க்கமும் நீதிமன்றத்தில் எதிரொலிப்பதை இப்படம் சொல்கிறது. பணத்திற்கு விலை போகும் நீதிபதி, இன பாசம் காட்டும் நீதிபதி, "எப்பவும் அதிகாரத்தை விட்டு தராதீங்க, அதிகாரம் ரொம்ப முக்கியம் "என நீதிபதியே தனிப்பட்ட முறையில்  சொல்வது என பல மிக சிறப்பான இடங்கள் படத்தில் இருக்கிறது.

கை உடைந்த நிலையில், எதிர்காலம் கேள்விகுள்ளாகும் போது ஆற்றாமையால் தவிப்பதும், நீதி கிடைக்காமல் நீதிமன்ற வளாகத்தில் மனம் உடைந்து அழுவதும் என ஜீவனுடன் நடித்துள்ளார் பேராசிரியர், முனைவர் நாடக நடிக்கருமான மு. ராமசாமி. இவரை திரையில் பார்க்கும் போது நம் வீட்டு பெரியவரின் நினைவு நமக்கு வருவது உறுதி. நாசர் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார். பௌலின்  ஜெஸ்கா, புகழ் உட்பட அனைத்து நடிகர்களும் கதைக்கு சரியாக பொருந்தி போகிறார்கள். கோர்ட், கேசுன்னு அலைய முடியாது என நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை. உண்மையில் நாம் அலைக்கழிக்கப் படுவதை சொல்கிறது இப்படம்.   நல்ல சினிமாவை கொண்டாட வேண்டும் என நினைப்பவர்களுக்கு வாய்தா நல்ல சாய்ஸ்.

மொத்தத்தில் வாய்தா -எளிமையான மக்களுக்கு மறுக்க படும் நீதி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com