தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல்,அஜீத், விஜய் ஆகிய நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர்.
நடிகை மீனாவுக்கும் பெங்களூரூவை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகருக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உண்டு. நடிகை மீனா கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் (வயது 48), கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மட்டுமின்றி, இவரது தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர், தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த இவரை உயர் சிகிச்சைகாக அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (ஜூன் 28) 9 மணியளவில் உயிரிழந்தார்.
நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு திரை பிரபலங்கள் வித்யாசாகர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.