நினைவஞ்சலி கட்டுரை: மலையாள தேசம் தந்த திரை கலைஞன் திலகன்!

நினைவஞ்சலி கட்டுரை: மலையாள தேசம் தந்த திரை கலைஞன் திலகன்!

நமது அண்டை மாநிலமான கேரளா பல சிறந்த கலைஞர்களையும், படைப்புக்களையும் கொண்டது.  இம்மாநிலத்திலிருந்து   அவ்வப்போது சில நடிகர்கள் தமிழ் சினிமாவிலும் நடிக்கிறார்கள்.இப்படி நடிப்பவர்களில் ஒரு சிலர் தமிழ் மக்கள் மனதில்  நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.இவர்களில் மிக முக்கியமானவர் திலகன்.

சுரேந்திரநாத் திலகன் என்ற இயற்பெயர் கொண்ட திலகன் பிறந்தநாள் இன்று.1935ம் ஆண்டு ஜூலை 15 ம் தேதி பிறந்தவர் திலகன். அன்றைய நடிகர்கள் பலருக்கு நாடகம் தாய் வீடாக இருந்ததைப் போல திலகனுக்கும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்தான். நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் பள்ளிப் பருவம் முதல்  நாடகத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.கேரளா பீயூ பில்ஸ் கிளப் என்ற அமைப்பு மூலமாக பல நாடகங்களில் நடிக்க ஆரம்பிதார்.

1973ல் பெரியார் என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.1979ல் உள்கடல் என்ற படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.1981ல் யவனிகா என்ற  படத்திற்கு கேரள அரசின் மாநில விருது கிடைத்தது.1980 மற்றும் 90களில் திலகன் இல்லாத மலையாளப் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். தமிழ் நாட்டில் உள்ள விஜயகாந்த் ரசிகர்களுக்கு மிக பிடித்த படமாக இருப்பது சத்ரியன். இப்படத்தில் திலகனின் அருமை நாயகம் என்ற காதா பாத்திரத்தில் மிரட்டி இருப்பார். வில்லனுக்கான எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் குரலின் ஏற்ற இறக்கங்களை வைத்தே சிறப்பான நடிப்பைத் தந்திருப்பார். பன்னீர் செல்வம் என்று விஜயகாந்தை அழைப்பதே மிகவும் ரசிக்கும் படியாக இருக்கும். மேட்டுக்குடி படத்தில் ஊரை ஏமாற்றும் சாமியாராக அருமையான நடிப்பை தந்திருப்பார். கள்ளழகர் படத்தில் ஒரு இஸ்லாமிய பெரியவராக நடித்து படத்திற்கு சிறப்பு செய்திருப்பார். மலையாளத்தில்  மிமிக்கிரி செய்யும் கலைஞர்கள் பலரும் திலகனை போல மிமிக்கிரி செய்ய திணறுவார்கள். திலகனின் மொழி உச்சரிப்பும், உடல் மொழியும் மிகவும் மாறுபட்டது. யாருடனும் ஒப்பிட முடியாதது.

ஆனால் திலகனோ முக பாவதிலும், உடல் மொழியிலும் மிக சிறப்பாக நடிப்பது சிவாஜி கணேசன்தான் என்று ஒரு முறை மலையாள தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார்.  பல தேசிய விருதுகளை   பெற்றவர் திலகன்.2009 ஆண்டு இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து சிறப்பித்தது மத்திய அரசு. மனதில் உள்ளதை பேசும் குணம் கொண்ட திலகன் 2011 ம் ஆண்டு சில நடிகர்களை பற்றி தனது கருத்துக்களை பதிவு செய்தார். இதனால் மலையாள சினிமாவில் உள்ள அமைப்பு ஒன்று படங்களில் நடிக்க தடை விதித்தது. இந்த விஷயத்தை திலகன் ஒரு பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில்  வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார்.300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த திலகன் 2012 ம் ஆண்டு மறைந்தார் நடிப்பிற்கு ஒரு பல்கலைக்கழகமாகவும், மிக அற்புதமான நடிகராகவும் வாழ்ந்த திலகனை பிறந்தநாளில் நினைவு கூறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com