
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் 2011-ம் ஆண்டு வெளியான சீடன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு பல சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த உன்னி முகுந்தனிற்கு மிகப் பெரிய வெற்றியை தந்தது இயக்குநர் வைசாக்கின் மலையாளத் திரைப்படமான மல்லு சிங்(2012). இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதுடன், அதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மலையாளப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன் மலையாள பட உலகில் முன்னனி நடிகர்களில் ஒருவராகவும் இடம் பிடித்தார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவர் நடிப்பில் வெளியான 'மாளிகப்புர'ம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் உன்னி முகுந்தன், 2017-ல் வெளிவந்த அச்சன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் பின்னனிப் பாடகராகவும் அறிமுகமானார்.
இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கருடன்’ என்ற தமிழ் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இந்நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளதாக, அவரது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹேக் செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதைப் பற்றிய தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட சேனல்கள் வழியாகதான் தொடர்ந்து தெரிவிப்பதாகவும், அவர் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களின் சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது தொடர் கதையாகவே மாறிவிட்டது. அந்த வகையில் கடந்த மாதம் நடிகை ஸ்ருதி ஹாசனின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட்டது.
அதேபோல் இந்தாண்டு தொடக்கத்தில் நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது.
பின்னர் சில நாட்களில் அது மீட்டெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் மாதம் இசையமைப்பாளர் டி. இமானின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூன் 18-ம்தேதி தனது கணக்கை வெற்றிகரமாக மீட்டெடுத்ததாகவும், மீண்டும் எக்ஸில் இணைந்ததாகவும் அறிவித்திருந்தார் டி.இமான்.
அந்த வகையில் நடிகை சுருதிஹாசன், குஷ்பு, டி.இமான் உள்ளிட்ட சினிமா பிரபலங்களின் சமூக வலைதள கணக்குகள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்ட நிலையில் தற்போது உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹேக் செய்யப்பட்டிருப்பது சினிமா துறையினரையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தற்போது பிரபலங்களின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரபலங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.