

எந்தவொரு பின்னணி இசையும் இல்லாமல், பிரம்மாண்ட செட் இல்லாமல், ஒரு நடிகருக்கு தான் நடிக்கிறோம் என்று கூட தெரியாமல் முழுக்க முழுக்க ஒரு எதார்த்தப் படமாக இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் செழியன் உருவாக்கிய படம் தான் 'டு லெட் (To let)'. இப்படம் குறித்தான சுவாரசிய விஷயங்கள் குறித்துப் பார்ப்போமா?
நாம் அன்றாடம் கடந்து போகும் ஒரு எளிய நடுத்தரக் குடும்பத்தின் வலியை மட்டுமே கருவாக வைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் 'டு லெட்' (To Let). 2017ம் ஆண்டு செழியன் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்த இப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், சுசீலா, தருண் ஆகியோர் நடித்திருந்தனர்.
பின்னணி இசையே இல்லாமல், முழுக்க முழுக்க ambience sound - ஐ (அதாவது சுற்றுபுறத்தில் இயல்பாக கேட்கும் சத்தம்) மட்டுமே பயன்படுத்தி உருவான படம். ஒரு படம் உணர்வுப்பூர்வமாக மக்களிடம் செல்ல உதவுவதே இசைதான். அதை நம்பாமல், எதார்த்தத்தை மட்டுமே நம்பி இயக்குநர் செழியன் இப்படத்தை உருவாக்கியிருந்தார்.
சென்னையில் வாடகை வீடு தேடி அலையும் ஒரு குடும்பத்தின் நிஜமான அவஸ்தையை, சாலைகளில் செல்லும் வாகனங்களின் இரைச்சல், பக்கத்து வீட்டுத் தம்பதியரின் சண்டை, காக்கா கத்தும் சத்தம், வீட்டு உரிமையாளரின் கணீர் குரல் போன்ற நிஜ சத்தங்கள் அப்படியே அச்சு அசலாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்டன.
அதேபோல், ஒளிப்பதிவிலும் எந்தவொரு செயற்கை விளக்குகளும் பயன்படுத்தவில்லை. கல்லூரி, பரதேசி போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்கும் படத்தில் எதார்த்தம் சற்றும் குறைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். வீட்டின் ஜன்னல் வழியாக வரும் சூரிய வெளிச்சம், தெருவிளக்கின் மங்கலான வெளிச்சம் மற்றும் வீட்டில் எரியும் சாதாரண டியூப்லைட் ஆகியவற்றை மட்டுமே வைத்து படம் முழுவதையும் படம்பிடித்தார்.
இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரமான சிறுவன் சித்தார்த், தான் இந்த படத்தில் நடிக்கிறோம் என்று கூட தெரியாமல் இருந்திருக்கிறான். ஆம்! அவனது இயல்பான விளையாட்டு, அவனது தூக்கம், அவனது மழலைப் பேச்சு ஆகியவற்றை அவனுக்கே தெரியாமல், அவனது போக்கிலேயே விட்டு படக்குழுவினர் கேமராவில் ரகசியமாகப் பதிவு செய்தனர். இதனால் தான் திரையில் அவனது குறும்புத்தனமும், அழுகையும் அத்தனை எதார்த்தமாக, பார்ப்பவர்களின் மனதைத் தொடும் வகையில் அமைந்தது.
அதேபோல், படம் எடுப்பதற்கு முன் மூன்று மாதங்களாக அம்மா, அப்பா மற்றும் மகன் கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் தினம் வெளியே பார்க், பீச் போன்ற இடங்களுக்கு சென்று ஒரு நிஜ குடும்பமாகவே வாழ வைக்கப்பட்டார்கள். அப்போதுதான் திரையில் அக்குடும்பத்தின் பிணைப்பு இயல்பாக தெரியும், நடிப்பது போல் இருக்காது என்பதனால்.
மக்கள் அன்றாடம் நேரில் பார்க்கும் விஷயங்கள் போலவே திரையில் பார்க்கும் அனுபவத்தைக் கொடுக்க நினைத்த இயக்குநர் செழியன், இப்படத்தை அவ்வளவு எளிதாக எடுக்கவில்லை. இக்கதையை எழுதி தயாரிப்பாளர்களை அனுகும்போது "இதில் பாட்டு இல்லை, ஃபைட் இல்லை, கிளைமாக்ஸ் சோகமாக இருக்கிறது, இதெல்லாம் ஓடாது" என்று கூறி நிராகரித்தனர்.
இறுதியாக ஒரு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டாலும், 2016ம் ஆண்டு இந்தியாவில் திடீரென பணமதிப்பிழப்பு (Demonetization) அறிவிக்கப்பட்டதால் அவரும் பின்வாங்கினார். இப்படத்தை பாதியிலேயே நிப்பாட்டிவிடக்கூடாது என்பதற்காக செழியன் மனைவி தனது சொந்த நகைகளை அடகுவைத்து பணம் கொடுத்து உதவினார்.
படத்தின் அதிகாரப்பூர்வ தயாரிப்பாளராக பிரேமா செழியன் ஆனார். ஆனால் வெளியிடுவதற்கான பணம் இல்லை என்பதால், உலகெங்கிலும் உள்ள சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு (International Film Festivals) இந்தப் படம் அனுப்பப்பட்டது. அங்கு படம் பார்த்த உலக சினிமா ரசிகர்கள் மிரண்டு போனார்கள். யாரும் எதிர்பாராத வகையில், இந்திய அரசின் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை 'டு லெட்' தட்டிச் சென்றது. அதுமட்டுமில்லாமல், ஆசிய பசிபிக் திரை விருதுகள், சர்வதேச திரைப்பட விழாக்கள் என உலகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட விருதுகளையும், 100-க்கும் அதிகமான திரைப்பட விழாக்களில் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டுகளையும் குவித்து தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்தது.