டைட்டிலா இது? தமிழ் பட தலைப்புகள் குறித்து வைரமுத்து ஆதங்கம்!
தற்போது வரும் தமிழ் படங்களின் பெயர்களை பார்க்கையில் வெட்கப்படுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார்.
பெரும் கவிஞராக அறியப்பட்டவர் தான் வைரமுத்து. இவரும் இளையராஜாவும் சேர்ந்து ஒரு காலத்தில் மாஸான பாடல்களை கொடுத்துள்ளனர். தொடர்ந்து இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். தொடர்ந்து இவர் மணி ரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கம்பேக் கொடுத்தார். ஆனாலும் சில சர்ச்சையில் சிக்கியதால் மீண்டும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டது.
பனை என்ற படத்தின் பாடல் வெளியிட்டு விழாவில் அவர் பேசியிருப்பது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் படங்களுக்கு ஆங்கில பெயர்களை தலைப்பாக வைக்கும் நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு ஆங்கிலப் பெயரான The Greatest of All Time என்பதன் சுருக்கமாகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து வரும் படத்திற்கு தக் லைஃப் (Thug Life) என்ற ஆங்கில சொற்கள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கமலுடன் சிம்பு, ஜெயம் ரவி, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஏ,ஆர், ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
விஜய் மற்றும் கமலை தொடர்ந்து அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்திற்கு குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற ஆங்கில சொற்கள் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் பெயர்கள் படங்களுக்கு டைட்டில் வைக்கப்பட்டு வந்த நிலையில், சமீபகாலமாக ஆங்கில தலைப்புகள் அதிகரித்து வருகின்றன.
இது குறித்து பேசிய வைரமுத்து, தற்போது படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படுவது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “தற்போது படங்களுக்கு வைக்கப்படும் தலைப்புகளைப் பார்த்தால் துக்கப்படுகிறேன். வெட்கப்படுகிறேன். தமிழில் சொற்களுக்கா பஞ்சம். சொல்லாடல்களா இல்லை. தலைப்பு என்றால் படித்தவுடன் இருதயத்தில் பசை போல ஒட்டிக் கொள்ள வேண்டாமா” என பேசியுள்ளார்.

