
திரைப்பட எழுத்தாளர், திரைப்பட வசனகர்த்தா, பாடலாசிரியர் என மேலும் பல பணிகளைச் செய்து வருகிறார் மதன் கார்க்கி. கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக வேலைபார்த்துக்கொண்டே சினிமாவில் பணியாற்றி வந்த இவர் 2013-ம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு திரைப்படத் துறையில் முழுநேரமாகப் பணியாற்றத் தொடங்கினார்.
தமிழ்த் திரையுலகில் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவரான மதன் கார்க்கி பாடலாசிரியராக மட்டுமின்றி பல படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். சங்கர் இயக்கிய ‘எந்திரன்' படத்தில் சுஜாதாவுடன் இணைந்து வசனம் எழுதும் பணியில் ஈடுபட்டபோது, அந்தப் படத்தில் இரண்டு பாடல்களை எழுதும் வாய்ப்பு மதன் கார்க்கிக்கு கிடைத்தது.
சினிமாவிற்காக அவர் எழுதிய முதல் பாடல் ‘எந்திரன்' படத்தில் வரும் ‘இரும்பிலே ஒரு இருதயம் முளைத்து..' என்ற பாடலாகும். ஆனால் இந்தப் படம் 2010-ம் ஆண்டுதான் வெளிவந்தது.
எனவே 2009-ம் ஆண்டு வெளியான ‘கண்டேன் காதலை' திரைப்படத்தில் மதன் கார்க்கி எழுதிய ‘ஓடோ.. ஓடோ.. ஓடோடிப்போறேன்..' என்ற பாடல்தான் முதல் பாடலாக வெளியானது. எந்திரன் படத்தில் பணியாற்றிய பிறகு , கார்க்கி தமிழ் திரைப்படத் துறையில் மிகவும் விரும்பப்படும் பாடலாசிரியர்களில் ஒருவராக மாறினார்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் , ஜி.வி.பிரகாஷ், இமான், எம்.எம். கீரவாணி, யுவன் ஷங்கர் ராஜா, சஞ்சய் லீலா பன்சாலி, அனிருத் என அனைத்து இசையமைப்பாளர்களுடனும் இணைந்து பணியாற்றி உள்ளார். பாகுபலி படத்தில் காளகேயர்கள் பயன்படுத்தும் `கிளிக்கி' மொழியை இலக்கண விதிகளோடு முழுவதுமாக உருவாக்கியிருந்தார் பாடலாசிரியர் மதன் கார்க்கி. படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் விருப்பத்திற்கேற்ப, கார்க்கி இந்த மொழியை உருவாக்கி, வசனங்களை எழுதினார். இவர் தமிழைத் தவிர, பல மொழிகளில் பாடல்களை எழுதுவதற்கு பெயர் பெற்றவர்.
தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணைந்து பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் மற்றும் ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்களுக்கு திரைப்பட வசனகர்த்தாவாக பணியாற்றி உள்ளார். அதுமட்டுமின்றி கத்தி, துப்பாக்கி, நான் ஈ, பாஜிராவ் மஸ்தானி, நடிகையர் திலகம், பத்மாவத் , 2.0 உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கும் பாடலாசிரியராகவும் மற்றும் திரைப்பட வசனகர்த்தாவாகவும் பணியாற்றி உள்ளார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிப்படங்களுக்கு பாடல்களை எழுதிய மதன் கார்க்கி, விரைவில் வெளியாக உள்ள ‘பறந்து போ' திரைப்படத்திற்காக தனது ஆயிரமாவது பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை பல உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கிய ராம் இயக்கியிருக்கிறார். சினிமாவைப் பொறுத்தவரை 100, 500, 1000 என்பது ஒரு தனிப் பெருமை வாய்ந்த எண்கள். அதில் ஆயிரம் பாடல்கள் என்ற மைல்கல்லை, பாடலாசிரியராக மதன் கார்க்கி எட்டியிருக்கிறார். ஆயிரம் பாடல்களை எழுதிய மதன் கார்க்கிக்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இவரது தந்தையான கவிஞர் வைரமுத்து, 6 ஆயிரம் பாடல்களை கடந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதன் கார்க்கிக்கு கபிலன் என்ற ஒரு தம்பி உண்டு. அவர் நாவலாசிரியர், தமிழ் திரைப்படங்களுக்கு பாடலாசிரியர் மற்றும் வசன எழுத்தாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன்கள் அனைவரும் சினிமா துறையில் பிரபலமடைந்திருப்பது பாராட்டுக்குரிய விஷயமாகும்.